| ADDED : ஆக 20, 2024 02:49 AM
புதுடில்லி;கடந்த சில மாதங்களாக வலுவாக உயர்ந்து வந்த வாகன நிறுவனங்களின் பங்கு விலை தற்போது சரியத் துவங்கியுள்ளன. விற்கப்படாத வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் கார் நிறுவனங்களின் தள்ளுபடி ஆகியவை அவற்றின் லாபத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், பங்குகள் இந்த அழுத்தத்தை சந்திக்கின்றன.'நிப்டி'யின் வாகனக் குறியீடு நடப்பு ஆகஸ்டில் மட்டும் இதுவரை 4.10 சதவீதம் சரிந்துள்ளது. இது, 'நிப்டி 50' குறியீட்டின் சரிவைக் காட்டிலும் இரு மடங்குக்கும் கூடுதலாகும். இதுகுறித்து தொழில் துறையினர் தெரிவித்திருப்பதாவது: விற்பனை குறைந்துள்ள நிலையில், தங்களின் சந்தை பங்கை அதே நிலையில் பராமரிக்க நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கத் துவங்கியுள்ளன. விரைவில் பண்டிகை காலம் வரவுள்ளதால், கார் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் முகவர்களின் கவனமும் அதை நோக்கியே உள்ளன. கடந்த ஆண்டு குறிப்பிட்ட இந்த 42 நாள் காலகட்டத்தில் மட்டும், 5.50 லட்சம் கார்கள் விற்பனையாகின. இது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகமாகும். நடப்பாண்டில் இப்படிப்பட்ட நிலையை எதிர்பார்க்க முடியாது என்றாலும், ஆரம்ப நிலை கார்கள் உள்ளிட்ட சில பிரிவுகளில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள், இரு சக்கர மின் வாகனங்களுக்கு மாறத் துவங்கியுள்ளதால், கார்களைக் காட்டிலும் இரு சக்கர வாகனப் பிரிவு, வரும் காலங்களில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்யக் கூடும். இவ்வாறு தெரிவித்தனர்.