மேலும் செய்திகள்
வாடகைக்கு வருகிறது 5,000 எலக்ட்ரிக் 'டூ - வீலர்'
07-Aug-2025
கோவை: எலக்ட்ரிக் வாகன மோட்டார் உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான அரிய வகை காந்தம் ஏற்றுமதிக்கு, சீனா தடை விதித்துள்ளதால், தட்டுப்பாடு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டு உ ள்ளது. இ- - வாகனங்கள் எனப்படும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில், கோவை முக்கிய கேந்திரமாக உருவெடுத்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, மின் வாகன உற்பத்தியில் ஓசூர் மற்றும் கோவை இரு நகரங்களும் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகின்றன. இரு, மூன்று சக்கர மின் வாகனங்கள் தயாரிப்பில், கோவை முன்னிலை பெற்று வருகிறது. எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில், முக்கியப் பொருளாக பயன்படுத்தப்படும் காந்த ஏற்றுமதிக்கு சீனா தடைவிதித்துள்ளதால், இந்தியாவுக்கான வரத்தும் தடைபட்டு, எலக்ட்ரிக் வாகன உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, 'சிடார்க்' எனப்படும் அறிவியல் மற்றும் தொழிற்சாலை பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் மோகன் செந்தில்குமார் கூறியதாவது: எலக்ட்ரிக் வாகன உற்பத்தி சார்ந்து, தமிழக அரசுடன் இணைந்து 'சிடார்க் இ.வி., பவுண்டேஷன்' துவக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு, 'நியோடிமியம்' வகை காந்தம் தேவை. சீனா, இதன் ஏற்றுமதியை நிறுத்திவிட்டது. அங்கு தான் இவ்வகை அரிய உலோகம், அதிகம் கிடைக்கிறது. அது இல்லாவிட்டால், இங்கு எலக்ட்ரிக் வாகனத்துக்கான மோட்டாரைத் தயாரிக்க முடியாது. எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெரு நிறுவனங்கள், இதற்கு மாற்று வழி தேடி ஆய்வில் இறங்கியுள்ளன. எலக்ட்ரிக் மின் வாகன தயாரிப்பு, மிக எளிய தொழில்நுட்பம். எனவே, கோவையில் சிறு சிறு நிறுவனங்கள் கூட இத்தயாரிப்பில் இறங்கியுள்ளன. அதற்கான கட்டமைப்பை நிறைய நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரிய வகை காந்தம் இல்லாதது இத்துறையை முடக்கிவிட்டது. மத்திய அரசு இதற்கு மாற்று வழியை யோசிக்க வேண்டும். இரு நாடுகளும் பேசித் தீர்வு கண்டு, உடனடியாக காந்தங்களைத் தருவிக்க வேண்டும். காந்தம் கிடைக்காததால், சீனாவில் இருந்து மோட்டாராகவே வாங்க வேண்டியுள்ளது. ஆனால், மோட்டாருக்கு வரி விதிப்பு அதிகம். பெரு நிறுவனங்கள் கூடுதல் விலை கொடுத்து, மோட்டாரை இறக்குமதி செய்து விட முடியும். சிறு நிறுவனங்களுக்கு அது உற்பத்திச் செலவை அதிகரிக்கும். எனவே, காந்தத்துக்கான தட்டுப்பாடு குறையும் வரை, எலக்ட்ரிக் வாகன மோட்டார் மீதான வரியை, மத்திய அரசு குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
“சின்க்ரோனஸ் ரிலக்டன்ஸ் மோட்டார் தொழில்நுட்பம், ஆக்சியல் பிளக்ஸ் தொழில்நுட்பம் என, காந்தமில்லா மோட்டாரைத் தயாரிப்பதற்கான ஆய்வுகளும் நடந்து வருகின்றன. சிடார்க்கும் இத்தகு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. “ஆனால், இவை சந்தைக்கு வர சில ஆண்டுகள் ஆகும். அதுவரை எலக்ட்ரிக் வாகன தயாரிப்புத்துறை முடங்கிவிடக்கூடாது. மத்திய அரசின் தலையீடு உடனடியாக தேவை,” என்றார், மோகன் செந்தில்குமார்.
07-Aug-2025