உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / மருத்துவ சாதனங்களுக்கான பி.எல்.ஐ., நீட்டிக்க சி.ஐ.ஐ., வலியுறுத்தல்

மருத்துவ சாதனங்களுக்கான பி.எல்.ஐ., நீட்டிக்க சி.ஐ.ஐ., வலியுறுத்தல்

புதுடில்லி:மருத்துவ தொழில்நுட்பத் துறைக்கான உற்பத்தி சார் ஊக்குவிப்புத் திட்டத்தை, மேலும் பல தயாரிப்புகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என, சி.ஐ.ஐ., தேசிய மருத்துவ தொழில்நுட்ப அமைப்பின் தலைவர் ஹிமான்ஷு பெய்ட் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: நாட்டிற்கு தேவையான மருத்துவ உபகரணங்களில், கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீதம் வரை இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் 30 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. மருத்துவ தொழில்நுட்ப துறைக்கான பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ சாதனங்களுக்கு மட்டும் உள்ளது. இது மேலும் பல மருத்துவ சாதன தயாரிப்புகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். பி.எல்.ஐ., திட்டத்தை மேலும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும், பொது கொள்முதல் ஆணை பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட மேலும் 358 சாதனங்களை சேர்ப்பதன் வாயிலாக, திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தவும் எங்களின் தொழில்துறை அமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது. தற்போது மருத்துவ சாதனங்களுக்கான பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ், 28 நிறுவனங்களுக்கு மட்டுமே திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் கடந்த 2021ம் நிதியாண்டு முதல் 2028ம் நிதியாண்டு வரை 3,420 கோடி ரூபாய் செலவைக் கொண்டிருந்தாலும், 10 முதல் 20 சதவீதம் மட்டுமே நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இறக்குமதியை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், வர்த்தக அமைச்சகத்தின் ஆர்.ஓ.டி.டி.இ.பி., எனப்படும் ஏற்றுமதி பொருட்கள் மீதான வரி விலக்குகளை, தற்போதுள்ள 0.5 சதவீதத்தில் இருந்து 2 முதல் 2.50 சதவீதம் வரை உயர்த்தவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான சிறப்பு ஊக்கத் தொகைகளை மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கவும், எங்கள் அமைப்பு அரசை தொடர்ந்து வலியுறுத்தும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை