உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / தொழில் மனைகள் ஏலம் முடிவை கைவிட்டது சிட்கோ

தொழில் மனைகள் ஏலம் முடிவை கைவிட்டது சிட்கோ

சென்னை :சிறு நிறுவனங்களின் எதிர்ப்பை அடுத்து, தொழிற்பேட்டைகளில் உள்ள தொழில் மனைகளை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் முடிவை, 'சிட்கோ' எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் கைவிட்டுள்ளது. தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்க சாலை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பேட்டையை, தமிழக அரசின் சிட்கோ நிறுவனம் அமைக்கிறது. இந்நிறுவனம் தொழிற்பேட்டைகளில் உள்ள மனைகளை ஒதுக்கீடு செய்ய விண்ணப்பம் பெற்று, குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்கிறது. மாநிலம் முழுதும் நிலத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், புதிய தொழிற்பேட்டை அமைப்பதற்கு அதிகம் செலவாகிறது. எனவே, ஏல அடிப்படையில் மனைகளை ஒதுக்க சிட்கோ, 2024 இறுதியில் முடிவு செய்தது. இதனால், மனைகள் வாங்க நிறுவனங்கள் இடையே போட்டி ஏற்பட்டு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும், அதன் வாயிலாக புதிய தொழிற்பேட்டையை விரைந்து அமைக்கலாம் என்றும் சிட்கோ எதிர்பார்த்தது.அதே சமயம், 'ஏல அடிப்படையில் விற்கப்படும் போது, பணம் இருப்பவர்கள் மட்டுமே மனைகளை வாங்க முடியும், இதனால், ஏல முறையில் ஒதுக்கீடு செய்யக் கூடாது' என்று அரசுக்கு, சிறு, குறு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. இதனால், ஏல முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சிட்கோ இயக்குநர்கள் குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், தொழிற்பேட்டை மனைகளை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் முடிவை நிரந்தரமாக கைவிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டு, அதற்கு கூட்டத்தில் ஒப்புதலும் அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்வது தொடரும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ