உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / அறிவியல் உபகரண கொள்முதல் விதிகளை எளிமையாக்கியது அரசு

அறிவியல் உபகரண கொள்முதல் விதிகளை எளிமையாக்கியது அரசு

புதுடில்லி:ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில், அறிவியல் உபகரணங்கள், தொடர்புடைய பொருட்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான நிதி ஒதுக்கீடு விதிகளை, மத்திய அரசு எளிமையாக்கியுள்ளது.மத்திய அரசின் அமைச்சகங்கள், தன்னாட்சி அமைப்புகள் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான உபகரணங்கள், பொருட்களை வாங்குவதற்கான பட்ஜெட், கொள்முதல் அளவு, செலவு மற்றும் கணக்கீடு ஆகியவற்றுக்கு இந்த புதிய விதிகள் பொருந்தும்.இதன்படி, துணைவேந்தர்கள், அறிவியல் அமைப்புகளின் இயக்குநர்கள், கல்வி நிறுவனங்கள் அரசின் இ - மார்க்கெட் வழியாக அறிவியல் உபகரணங்கள், பொருட்களை கொள்முதல் செய்யலாம். எளிமையாக்கப்பட்ட விதியின்படி, மேற்கோள் பட்டியல் இல்லாமல், கொள்முதல் செய்வதற்கான உச்சவரம்பு ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்கிறது. கொள்முதல் கமிட்டிக்கான உச்சவரம்பு 2 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக இருக்கும். குறிப்பிட்ட அளவு டெண்டர் கொள்முதலுக்கு ஒரு கோடி ரூபாயும்; விளம்பரப்படுத்தும் டெண்டர் கொள்முதலுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேலும் அனுமதி வழங்கப்படும்.எனினும், அறிவியல் தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி, தொழிற்துறை ஆராய்ச்சி, அணுசக்தி, விண்வெளி, புவி அறிவியல், ராணுவம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆகிய துறைகள் மற்றும் அவை சார்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே இந்த தளர்வு பொருந்தும்.இதுகுறித்து மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:அரசின் இந்த நடவடிக்கையால், இளம் ஆராய்ச்சியாளர்கள், நிறுவனங்களின் தன்னாட்சி அதிகரிக்கும். ஸ்டார்ட்அப்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு விதிகளின் தளர்வு சிறந்த வாய்ப்பாக அமையும். தொழில் செய்வதற்கு ஏற்ற சூழல் என்ற குறிக்கோள் போலவே, ஆராய்ச்சிக்கு ஏற்ற சூழல் ஏற்படுத்த விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. அனுமதிக்கான தாமதத்தை களைவதுடன், நிதி ஒதுக்கீட்டில் சுதந்திரம் அளிப்பதன் வாயிலாக, ஆராய்ச்சியாளர்களின் அதிகாரம் கூடுதலாகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ