உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஏலக்காய் முன்பேர வணிகம் தளம் அமைத்தது எம்.சி.எக்ஸ்., : விவசாயிகள், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு பயன்

ஏலக்காய் முன்பேர வணிகம் தளம் அமைத்தது எம்.சி.எக்ஸ்., : விவசாயிகள், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு பயன்

புதுடில்லி: எம்.சி.எக்ஸ்., எனும் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் வர்த்தக தளம், 'ஏலக்காய் பியூச்சர்ஸ்' முன்பேர வணிகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏலக்காய் விலை நிலவரத்தை அறிந்துகொள்வதை மேம்படுத்துவதும், சிறந்த இடர் மேலாண்மையை உறுதி செய்வதுமே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி உள்ளிட்ட கமாடிட்டி பிரிவில் முன்பேர வணிகம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக, ஏலக்காய் பிரிவில் முன்பேர வணிகம் அறிமுகமாகி உள்ளது. நேற்று முதல் வர்த்தகம் துவங்கியுள்ள நிலையில், ஆரம்பகட்டமாக, வரும் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் காலாவதியாகும் ஏலக்காய் முன்பேர ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வர்த்தக நடைமுறையை பொறுத்தவரை, 100 கிலோ அளவிலான ஏலக்காயைக் குறிக்கும் வகையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வந்தன்மேடு விலையை அடிப்படையாகக் கொண்டு வணிகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்.சி.எக்ஸ்., நிர்வாக இயக்குநர் பிரவீணா ராய் கூறியதாவது: மசாலாப் பொருள் விவசாயிகள் மற்றும் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், டிஜிட்டல் முறையில், விவசாயிகளை உள்ளடக்கிய வேளாண் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அரசின் முயற்சிக்கு ஆதரவாகவும், தயாரிப்பு வகைகளை விரிவுபடுத்தியுள்ளோம். ஏலக்காய், உலகளாவிய தேவை கொண்ட ஒரு பொருள். எனவே, இந்த ஒப்பந்தம் விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு இடர் மேலாண்மை, வருமான உறுதிப்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் வெளிப்படையான விலை நிலவரத்தை அறிந்து கொள்வது ஆகியவற்றுக்கான நம்பகமான தளமாக விளங்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை