வாசகர்கள் கருத்துகள் ( 1 )
please s the share market new very usefull me
மும்பை:கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில், நடப்பு செப்டம்பர் மாதத்தில் தான், மிக அதிகளவிலான நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வாயிலாக நிதி திரட்ட வந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இம்மாதத்தில், இதுவரை 28 நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வந்துள்ளன.நாட்டின் பொருளாதாரம் குறித்து, ஆர்.பி.ஐ., துணை கவர்னர் மைக்கேல் தேபபிரதா பத்ரா தலைமையிலான குழு தயாரித்த செப்டம்பர் மாதத்துக்கான அறிக்கையை, ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:நிதி சந்தைகள் விரைவான மாற்றங்களை சந்தித்து வருகின்றன. இதனால் நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர அதிக ஆர்வம் காட்டுகின்றன. இதையடுத்து, பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான விண்ணப்பங்கள் பன்மடங்கு பெருகியுள்ளன.'செபி'யின் ஆய்வு முடிவுகளில், ஐ.பி.ஓ., வெளியீட்டில் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 54 சதவீதம் பங்குகள், பட்டியலிடப்பட்ட ஒரு வாரத்தில் விற்பனைக்கு வருவது தெரியவந்துள்ளது.நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில், உலகளவில் அதிக எண்ணிக்கையில் ஐ.பி.ஓ., வெளியிட்ட நாடுகளில் இந்தியா இடம் பிடித்துள்ளது. இதில், ஐ.பி.ஓ., எண்ணிக்கை அடிப்படையில், 27 சதவீதமும், தொகை அடிப்படையில், 9 சதவீதமும் இந்தியாவின் பங்களிப்பாகும்.செப்டம்பர் இரண்டாவது வாரத்தில், ஐ.பி.ஓ.,வெளியீட்டிற்கு வந்த, 'பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ்' நிறுவனத்தின் பங்குகளை பெற, 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்ததை வைத்து, முதலீட்டாளர்களின் உற்சாகத்தை அளவிட முடியும். கடந்த 14 ஆண்டுகளில், நடப்பு செப்டம்பர் தான் ஐ.பி.ஓ., வெளியீட்டின் மிகவும் பரபரப்பான மாதமாக மாறி உள்ளது.பங்கு சந்தைக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், நிறுவனங்கள் நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் 60,000 கோடி ரூபாய் மூலதனத்தை திரட்டியுள்ளன. உலகளாவிய போக்கால், பங்குச் சந்தை சிறிய சரிவை சந்தித்தாலும், தொடர்ந்து உயர்வு கண்டு எழுச்சியுடன் காணப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அண்மையில், 'லீலா ஹோட்டல்ஸ்' 5,000 கோடி ரூபாய் நிதி திரட்ட ஐ.பி.ஓ., வருவதற்கு செபியிடம் விண்ணப்பித்துள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் போது 3,000 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும் 2,000 கோடி ரூபாய்க்கு பங்குதாரர்களின் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.
please s the share market new very usefull me