ரிலையன்ஸ் கடன் கணக்கு மோசடி என எஸ்.பி.ஐ., புகார்
மும்பை:அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் கணக்கை எஸ்.பி.ஐ., மோசடி பிரிவில் சேர்த்தது, ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு மட்டுமின்றி, நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பிற்கு முரணானது என அவரது வழக்கறிஞர்கள், எஸ்.பி.ஐ.,க்கு கடிதம் எழுதி உள்ளனர். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் கடன் கணக்கை மோசடி பிரிவில் சேர்ப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க, எஸ்.பி.ஐ., முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, எஸ்.பி.ஐ.,யிடம் இருந்து கடிதம் வந்ததாக பங்குச் சந்தையிடம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2017ல் தேனா வங்கியிடம் இருந்து, பல்வேறு கடன்களை திருப்பி செலுத்த, கடனாக பெற்ற 250 கோடி ரூபாயை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் இன்ப்ராஸ்ட்ரெக்சர் நிறுவனத்தில் டிபாசிட் செய்ததாகவும்; மூலதன செலவினங்களுக்காக ஐ.ஐ.எப்.சி.எல்.,லிடம் இருந்து கடனாக பெற்ற 248 கோடி ரூபாய் கடன் களை வேறு வகையில் பயன்படுத்தியதாகவும் எஸ்.பி.ஐ., புகார் தெரிவித்திருந்தது.ஆர்.பி.ஐ., விதிமுறைப்படி, மோசடி என வங்கியால் அறிவிக்கப்படும் கடன் கணக்கு குறித்து 21 நாட்களுக்குள் ஆர்.பி.ஐ.,யிடம் வங்கி தெரிவிக்க வேண்டும். சி.பி.ஐ., அல்லது காவல் துறையிலும் புகார் அளிக்க வேண்டும்.