உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / செபி மாதவி மீதான விசாரணை ஆதாரம் இல்லை என கைவிட்டது அரசு 2025 பிப்ரவரி வரை பதவியில் தொடர்வார்

செபி மாதவி மீதான விசாரணை ஆதாரம் இல்லை என கைவிட்டது அரசு 2025 பிப்ரவரி வரை பதவியில் தொடர்வார்

புதுடில்லி:'செபி' தலைவர் மாதவி புரி புச் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து, மத்திய நிதி அமைச்சகமும், புலனாய்வு அமைப்புகளும் நடத்திய விசாரணையில், எந்த வித ஆதாரமும் கிடைக்காததால், நடவடிக்கையும் ஏதும் எடுக்கப்படாது என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாதவி, தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த 'ஹிண்டன்பர்க்' நிறுவனமும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இதையடுத்து, மத்திய நிதி அமைச்சகமும், புலனாய்வு அமைப்புகளும் அவர் மீதான விசாரணையை துவங்கின. ஆர்.இ.ஐ.டி., எனும் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்டுகளுக்கு சாதகமாக கொள்கை முடிவுகள் மேற்கொண்டதன் வாயிலாக, தனது கணவருக்கு தொடர்புடைய 'பிளாக்ஸ்டோன்' நிறுவனத்துக்கு உதவியதாக, மாதவி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், ஆர்.இ.ஐ.டி.,க் களுக்கான விதிகள், அவர் செபி தலைவராவதற்கு முன்பானவை என்றும்; அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு என்றும் அரசு கருதுகிறது.அடுத்ததாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், வருவாய் உட்பட தொடர்ந்து பல்வேறு பலன்களை அனுபவித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், ஆதாரம் ஏதும் இல்லாததால் இந்த பிரச்னையும் தீர்க்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக, செபியில் பணிச்சூழல் மோசமாக உள்ளதென ஊழியர்கள் சிலர், நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதுகுறித்து செபியின் தலைமை பொறுப்பு குழுவுடன் அரசு கலந்துரையாடிய பிறகு, இதற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. இதையடுத்து, மாதவி மீதான குற்றச்சாட்டுகளுக்கு, சான்றாக எந்த ஒரு விஷயமும் கிடைக்கவில்லை என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து, அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் பதவிக்காலம் முடியும் வரை, மாதவி செபி தலைவர் பதவியில் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

K.n. Dhasarathan
அக் 23, 2024 16:11

நெருப்பு ல்லாமல் புகை வருமா ? வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? என்ன என்ன குற்றங்கள் ? அதிர்க்கு பதில் என்ன ? விபரம் வெளியிடலாம் ? மத்திய அரசே புலன் விசாரணை மேற்கொண்டதாம் ? ஆதாரம் ஏதும் இல்லையாம், யார் காதில் பூ சுற்றுகிறீர்கள்? கூட்டுக்குழு ஒன்று அமைக்கலாம், பல தரப்பினரையும் சேர்க்கலாம், சும்மா பேருக்கு நடத்தினால், நாளை ஆட்சி மாறும்போது, காட்சி மாறும், இப்போது தப்பித்தவர்கள் நாளை சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள், நிரூபிக்கட்டும். அல்லது சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2024 22:13

நீங்கள் தகுந்த ஆதாரங்களுடன் செபி இயக்குனர் மாதபி மீது வழக்குத் தொடருங்கள் ....


kannan
அக் 23, 2024 12:46

அப்ப பொய் புகார் சொன்ன நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்வார்களா?


புதிய வீடியோ