பிப்ரவரியில் கைமாறிய கம்பெனிகள் 3 ஆண்டுகளில் இல்லாத அதிகரிப்பு
புதுடில்லி:இந்தியாவில் கடந்த மாதம் 62,640 கோடி ரூபாய்க்கு இணைப்பு, கையகப்படுத்துதல் மற்றும் தனியார் பங்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, 'கிராண்ட் தோர்ன்டன் பாரத்' நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த மாதம் இந்தியாவில் 41,760 கோடி ரூபாய் மதிப்பிலான இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், 20,880 கோடி ரூபாய்க்கு தனியார் பங்கு ஒப்பந்தங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மொத்தமாக, 62,640 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவே அதிகபட்சஒப்பந்த மதிப்பாகும். நிச்சயமற்ற உலக பொருளாதார சூழல், வர்த்தக போர் குறித்த அச்சம், இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து தொடர்ந்து வெளியேறும் அன்னிய முதலீட்டாளர்கள் என சவாலான சூழல் நிலவி வரும் நிலையில், வலுவான உள்நாட்டு தேவையின் காரணமாக நாட்டின் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் சந்தை வலுவாகவே உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய கையகப்படுத்தல்கள்
ஓ.என்.ஜி.சி., மற்றும் என்.டி.பி.சி., கிரீன் நிறுவனங்கள் இணைந்து அயனா ரினீவபிள் பவர் நிறுவனத்தை 20,000 கோடி ரூபாய்க்கு முழுவதுமாக கையகப்படுத்தின பிராணா குழுமம், அமெரிக்காவைச் சேர்ந்த ஓவன்ஸ் கார்னிங் நிறுவனத்தின் கண்ணாடி பிரிவு வணிகத்தை கிட்டத்தட்ட 6,500 கோடி ரூபாய்க்கு வாங்கியது குஜராத்தைச் சேர்ந்த டோரன்ட் குழுமம், ஐ.பி.எல்., அணியான குஜராத் டைட்டன்சின் 67 சதவீத பங்குகளை 5,000 கோடி ரூபாய்க்கு வாங்கியது.முக்கிய தனியார் பங்கு முதலீடுகள் கியூப் ஹைவேஸ் நிறுவனம், இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளின் நிர்வாக மற்றும் பராமரிப்பு உரிமையை 4,200 கோடி ரூபாய்க்கு வாங்கியது மல்டிபிள்ஸ் நிறுவனம் க்யூபர்ஸ்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை 1,700 கோடி ரூபாய்க்கு வாங்கியது.