உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஆயிரம் சந்தேகங்கள் :சிபில் ஸ்கோரை எப்படி உயர்த்துவது?

ஆயிரம் சந்தேகங்கள் :சிபில் ஸ்கோரை எப்படி உயர்த்துவது?

வங்கிகளுக்கு இடையே கடன் வழங்குவதில் போட்டி இருக்கும்போது, நீண்டகால வீட்டுக்கடன் வாங்குகையில் எந்தெந்த விஷயங்களில் வட்டியை மிச்சப்படுத்தலாம்?

செ.செல்வக்கோ பெருமாள்,காஞ்சிபுரம்.நீண்ட கால வீட்டு கடன் வாங்கும்போது, முதலிலேயே வட்டியை நீங்கள் 'நெகோஷியேட்' செய்து வாங்கிக் கொள்ளலாம். நீண்ட கால கடன் எனும்போது வங்கிகளும் வட்டியை சற்றே குறைத்துக்கொள்வர். அவர்களுக்கு எப்படி இருந்தாலும் கூடுதலான லாபம் கிடைக்கும்.ஆனால், இப்பொழுது இருக்கக்கூடிய சூழலில், ஒரு குறிப்பிட்ட சதவீதத்துக்கு கீழ் வட்டி விகிதத்தை வங்கிகள் குறைத்து தராது. ஆனால், பண்டிகைக் கால சலுகைகள் என்று 'பிராசசிங்' கட்டணம், நிர்வாகக் கட்டணம் உள்ளிட்ட விஷயங்களில், கணிசமான தள்ளுபடி தர முடியும்.பொதுவாகவே நீண்ட கால வீட்டு கடன் என்பது ஒரு பெரிய சிக்கல். நீங்கள் கட்டக்கூடிய இ.எம்.ஐ., வேண்டுமானால் குறைவாக இருக்கும்.ஆனால், மொத்தமாக கட்டி முடிக்கும் போது, நீங்கள் வாங்கிய கடன் தொகையை போல், குறைந்தபட்சம் மூன்றில் இருந்து நான்கு மடங்கு வரை பணத்தை செலுத்தி இருப்பீர்கள். எனவே, வீட்டுக் கடன் என்பதை குறுகிய கால கடனாக வைத்துக் கொள்வது உங்களுக்கு லாபம் அளிக்கக்கூடியதாக இருக்கும்.

நல்ல வருவாய் தரக்கூடிய மியூச்சுவல் பண்டுகள் எவை?

கல்யாணசுந்தரம், மாதவரம், சென்னை.நல்ல வருவாய் என்று நீங்கள் கேட்பதை நான் இப்படி புரிந்து கொள்கிறேன்.குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அல்லது ஐந்தாண்டுகளில் தொடர்ச்சியாக வளர்ச்சியை தரக்கூடிய மியூச்சுவல் பண்டு திட்டங்களை தான், நல்ல வருவாய் தரக்கூடிய பண்டுகள் என்று நான் கருதுகிறேன்.சி.ஏ.ஜி.ஆர். எனப்படும், கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் இதைப் பார்க்கவேண்டும். அந்த வகையில் 'ஈக்விட்டி ப்ளெக்ஸ் கேப் பண்டுகள்' நல்ல வருவாய் தரக்கூடியவை.மூன்று ஆண்டுகளில் இந்த வகை பண்டுகள், 29 சதவீதமும்; 5 ஆண்டுகளில் 23 சதவீதமும் தரக்கூடியவை. மல்டிகேப் பண்டுகளும் மூன்று ஆண்டுகளில் 25.4 சதவீதமும்; ஐந்தாண்டுகளில் 20.60 சதவீதமும் வருவாய் தரக்கூடியவை. ஈக்விட்டி வேல்யூ பண்டுகள் மூன்றாண்டுகளில் 26.70 சதவீதமும்; ஐந்தாண்டுகளில் 22.40 சதவீதமும் ரிட்டர்ன் கொடுக்கின்றன.இந்த பண்டு கேட்டகிரிகளில், நிறைய பண்டுகள் உள்ளன. இதில் எது உங்களுக்கு சவுகரியமானதோ அந்த பண்டுகளை பார்த்து முதலீடு செய்யலாம்.

என் 'சிபில் ஸ்கோர்' உயர மாட்டேன் என்கிறது. மியூச்சுவல் பண்டுகளுக்கு நிகராக கடன் வாங்கி, ஒழுங்காக மாதம் தோறும் கடன் கட்டி வந்தால், என் சிபில் ஸ்கோர் உயருமா?

ஜே.ராஜேஷ், சென்னை.ஆமாம், நீங்கள் மியூச்சுவல் பண்டுக்கு எதிராக கடன் வாங்கி, அதை முறையாக செலுத்தும் போது, உங்களுடைய சிபில் ஸ்கோர் உயர்வதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் ஒரு செய்தியை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.மியூச்சுவல் பண்டுக்கு எதிராக கடன் கொடுக்கக் கூடிய நிறுவனங்களும் முதலில் உங்கள் சிபில் ஸ்கோரை பார்த்து விட்டு தான் கடன் கொடுக்கும். ஒரு சில தனியார் நிறுவனங்கள் தான் குறைவாக சிபில் ஸ்கோர் இருக்கக் கூடியவர்களுக்கு கடன் கொடுக்க முன் வரும்.மியூச்சுவல் பண்டுகளை அடமானமாக வைத்துக்கொண்டு கொடுக்கும்போது கண்டிப்பாக கூடுதலான வட்டியை உங்கள் மீது சுமத்துவர்.நீங்கள் செலுத்தக்கூடிய தொகை மிகவும் அதிகமாக தான் இருக்கும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

தேசிய பென்ஷன் திட்டம் மற்றும் அதன் வழிமுறைகள் பற்றி கூறவும்.

மணிகண்டன், மதுரைதேசிய பென்ஷன் திட்டம் என்பது, எந்த தனிநபரும் சேரக்கூடிய ஒரு பொதுவான திட்டம் ஆகும். இது உங்களுடைய ஓய்வு காலத்திற்கு தேவைப்படக்கூடிய கணிசமான தொகையை சேமித்து வைப்பதற்கு உதவக்கூடிய திட்டம்.இந்த திட்டத்தில் சேர்வது மிகவும் எளிதானது. தேசிய பென்ஷன் திட்டத்தின் வலைதளத்தில் போய், உங்களுடைய பான் மற்றும் ஆதார் எண்களை உள்ளீடு செய்து, நீங்கள் உங்களுக்கு ஒரு புதிய கணக்கை துவங்கலாம்.இந்த கணக்கில் தொடர்ச்சியாக நீங்கள் முதலீடு செய்து வரலாம். அது 500 ரூபாயாக இருந்தாலும் சரி, 1,000 ரூபாயாக இருந்தாலும் சரி. நீங்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்து வரும் பொழுது, இந்த திட்டத்தின் வாயிலாக, கணிசமான தொகை, உங்களது 60 வயது காலகட்டத்தில் சேர்ந்து இருக்கும்.இந்தப் பணத்தை பெரிய வங்கிகளின் பென்ஷன் மேனேஜர்கள் நிர்வகிப்பர்.எந்த வங்கியின் பென்ஷன் மேனேஜரை நீங்கள் தேர்வு செய்கிறீர்களோ, அவர்கள் தொடர்ச்சியாக உங்களுடைய பணத்தை கட்டிக் காத்து, முதலீடு செய்து, மேன்மேலும் பன்மடங்கு பெருக்கி கொடுப்பார்கள்.உங்கள் 60 வயது காலகட்டத்தில், நீங்கள் இந்த பென்ஷன் மொத்த தொகுப்பில் இருந்து, 60 சதவீதம் வரை கையில் பணமாக எடுத்துக் கொள்ளலாம். மிச்சம் 40 சதவீதத்துக்கு, நீங்கள் ஏதேனும் ஒரு பென்ஷன் திட்டத்தை அப்போது வாங்கிக் கொள்ள வேண்டும்.இதன் வாயிலாக உங்களுக்கு தொடர்ச்சியாக மாதந்தோறும் குறிப்பிட்ட ஓய்வூதியம் கிடைக்கும். அரசாங்கத்தில் பணியாற்றாத தனியார் துறை பணியாளர்களுக்கு, இந்த பென்ஷன் திட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்துவரும்போது, ஆண்டுக்கு 50,000 ரூபாய் வரை கூடுதல் கழிவும் கோரலாம்.ஆயிரம் சந்தேகங்கள்தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.ஆர்.வெங்கடேஷ்gmail.comph: 98410 53881


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ