உள்ளூர் செய்திகள்

வர்த்தக துளிகள்

'பாவ' வரியை பரிசீலிக்க அமைச்சர்கள் குழு

புதுடில்லி:ஜி.எஸ்.டி., அறிமுகத்தின்போது, மாநில அரசுகளுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டுவதற்காக விதிக்கப்பட்ட இழப்பீட்டு கூடுதல் வரி குறித்து ஆராய, அமைச்சர்கள் குழுவை ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைத்துள்ளது. 28 சதவீத வரிக்கும் கூடுதலாக, சொகுசு வரியாக இறக்குமதி கார், விலையுயர்ந்த கைக்கடிகாரம், நகை, தனிநபர் படகு, விமானம், நிறுவனங்கள் வாங்கும் ஹெலிகாப்டர் ஆகியவற்றின் மீதும், 'பாவ' வரியாக, புகையிலை பொருட்கள், மது வகைகள், சூதாட்டம் போன்றவற்றின் மீதும், 2022 மார்ச் வரை கூடுதலாக இழப்பீட்டு வரி விதிக்கப்பட்டது. அதை, 2026 மார்ச் வரை மத்திய அரசு நீட்டித்தது. இன்னும் ஒன்றரை ஆண்டு அவகாசமே உள்ள நிலையில், இதற்கு மாற்று வழிகளை ஆராய, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட 10 மாநில அமைச்சர்களை கொண்ட இந்த குழு, வரும் டிசம்பர் 31ம் தேதிக்கு முன், தன் பரிந்துரை அறிக்கையை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரூ.1,500 கோடிக்கு ஐ.பி.ஓ.,

மவுரி டெக் திட்டம்புதுடில்லி, செப். 28-தகவல் தொழில்நுட்ப தீர்வளிக்கும் மவுரி டெக் நிறுவனம், 1,500 கோடி ரூபாய் திரட்டுவதற்காக, புதிய பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஹைதராபாதைச் சேர்ந்த இந்நிறுவனம், ஐ.பி.ஓ., அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பித்துள்ளது. இதில், 440 கோடி ரூபாயை புதிய பங்கு வெளியீடாகவும் 1,060 கோடி ரூபாயை நிறுவனர்கள், பங்குதாரர்கள் வசமுள்ள பங்குகளை விற்பதற்கான 'ஆபர் பார் சேல்' முறையிலும் திரட்ட, மவுரி டெக் திட்டமிட்டுள்ளது. சென்னை, பெங்களூரு, விசாகப்பட்டினம், இந்துார், கோலாப்பூர் நகரங்களில் செயல்படும் இந்நிறுவனத்தின் அலுவலகங்கள், அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்ரிக்க நாடுகளிலும் இயங்குகின்றன. 'டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா' உட்பட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் வர்த்தக போட்டியில் மவுரி டெக் உள்ளது.

சர்க்கரை, எத்தனால் விலை அதிகரிக்க அரசு பரிசீலனை

புதுடில்லி:சர்க்கரை, எத்தனாலின் விற்பனை விலையை உயர்த்த பரிசீலிப்பதாக, மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். 2019 பிப்ரவரி மாதம் முதல், சர்க்கரை விற்பனை விலை கிலோ 31 ரூபாயாக உள்ளது. 2022 - 23ம் ஆண்டு முதல், எத்தனாலின் மூன்று ரகங்கள் விலை, லிட்டருக்கு 56 முதல் 65 ரூபாயாக நீடிக்கிறது. சர்க்கரை உற்பத்திக்கான கணக்கீட்டின் விபரங்களை பெற்ற பின், விலை உயர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். சர்க்கரை ஏற்றுமதி மீதான தடையை நீக்குவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என அவர் கூறினார். இது, சர்க்கரை, எத்தனால் தொடர்புடைய துறையினருக்கு இனிப்பான செய்தியாக அமைந்த நிலையில், அத்துறை நிறுவனங்களின் பங்குகள் விலை நேற்று அதிகரித்தன.

காக்ஸ் அண்டு கிங்ஸ் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு

புதுடில்லி,:வங்கிக் கடன் பெற்று மோசடி செய்ததாக, பிரபல பயண ஏற்பாட்டு நிறுவனமான 'காக்ஸ் அண்டு கிங்ஸ்' நிறுவனர்கள், இயக்குனர்கள் மீது, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது. மிகைப்படுத்தப்பட்ட வர்த்தக தகவல்களை அளித்து, 525 கோடி ரூபாயை இந்நிறுவனம் கடனாக பெற்றுள்ளதாக, யெஸ் வங்கி தரப்பில் சி.பி.ஐ.,க்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஏமாற்றுதல், போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்தல், குற்றவியல் தவறான நடத்தை மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில், காக்ஸ் அண்டு கிங்ஸ் நிறுவன உயரதிகாரிகளான அஜய் அஜித் பீட்டர் கேர்கர், உஷா கேர்கர், அனில் கந்தேல்வால், மஹாலிங்க நாராயணன், பெசி படேல் ஆகியோர் மீது, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளது.

பொது கணக்கு குழு 'செபி' மாதவிக்கு சம்மன்?

புதுடில்லி:இதுவரை இல்லாத வகையில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி'யின் 2022 - 23, 2023 - 24 நிதியாண்டுகளின் கணக்குகளை சமர்ப்பிக்குமாறு, பார்லி., பொது கணக்கு குழு உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி., வேணுகோபால் தலைமையிலான குழு, மத்திய நிதி அமைச்சகத்திடம் இதற்கான புள்ளிவிபரங்களை பெற்றுத் தருமாறு கேட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தன்னாட்சி பெற்ற அமைப்புகளில் ஒன்றாக செபி உள்ள நிலையில், அதன் கணக்குகளை பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு கேட்பது, முதல்முறையாகும். விபரங்களை ஆராய்ந்த பின், குழுவின் அடுத்த கூட்டத்தில் ஆஜராகுமாறு செபி தலைவர் மாதவி புரி புச்சுக்கு, பொது கணக்கு குழு சம்மன் அனுப்பக்கூடும் என்றும் அந்த அதிகாரி கூறினார். அரசின் வருவாய் மற்றும் செலவை தணிக்கை செய்து, பொதுப் பணத்திற்கான பொறுப்பை உறுதிப்படுத்துவது பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவின் பணியாகும்.

'செயில்' நிறுவனத்துடன்ஆர்.ஐ.என்.எல்., இணைப்பு?

புதுடில்லி:பொதுத்துறை ஸ்டீல் நிறுவனமான ஆர்.ஐ.என்.எல்., எனப்படும் ராஷ்ட்ரீய இஸ்பத் நிகம் லிமிடெட் நிறுவனத்தை, மற்றொரு ஸ்டீல் நிறுவனமான செயிலுடன் இணைக்க அரசு பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஐ.என்.எல்., நிறுவனத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள தொழிற்சாலையின் நஷ்டத்தை சமாளிக்க, அதற்கு சொந்தமான நிலங்களில் 1,500 முதல் 2,000 ஏக்கர் வரை,, என்.எம்.டி.சி., எனப்படும் 'நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்' நிறுவனத்துக்கு விற்கவும், வங்கிக் கடன் தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியுடன் பேச்சு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்.ஐ.என்.எல்., நிறுவனத்தின் மொத்த கடன் நிலுவை 35,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாகவும், தொடர்ந்து இழப்பை சந்தித்து வரும் இந்நிறுவனம், கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும் மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை