உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / ஆயிரம் சந்தேகங்கள் / ஆயிரம் சந்தேகங்கள்: அரசு ஊழியர் டிமேட் கணக்கு துவக்கலாமா?

ஆயிரம் சந்தேகங்கள்: அரசு ஊழியர் டிமேட் கணக்கு துவக்கலாமா?

நான் தமிழக அரசு பணியாளன். என் பெயரில் மியூச்சுவல் பண்டு, பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா? என்னிடம், 'டிமேட்' கணக்கு இல்லை. அரசு ஊழியர் டிமேட் கணக்கு துவக்கலாமா?

ஏ.சுந்தரேசன், ராஜபாளையம்.நீங்கள், 'டிமேட்' கணக்கு துவங்கி முதலீடு செய்யலாம். ஆனால், ஒவ்வோர் ஆண்டும், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் நீங்கள் முதலீடு செய்திருந்தால், அந்த விபரங்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது தான் விதி. நீங்கள் குருப் ஏ, பி., பிரிவுகளைச் சேர்ந்த அலுவலராக இருந்தால், ஜனவரி முதல் டிசம்பர் வரையான ஓராண்டில், 50,000 ரூபாய்க்கு மேல் பங்குகள், பத்திரங்கள், மியூச்சுவல் பண்டுகள், இதர முதலீடுகளில் பரிவர்த்தனை களைச் செய்திருந்தால், அதற்குரிய படிவத்தில் இந்த விபரங்களை தமிழக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். குரூப் சி, டி., பிரிவு பணியாளராக இருந்தால், 25,000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனைகளை செய்திருந்தால், அந்த விபரங்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த வரையறை, பங்குகள், பத்திரங்கள், மியூச்சுவல் பண்டுகளை உள்ளிட்டவற்றை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்குமான மொத்த பரிவர்த்தனைகளை உள்ளடக்கியது ஆகும். இந்த விதிகளில் புதிய திருத்தம் ஏதும் வந்தமாதிரி தெரியவில்லை. உங்கள் துறையின் பர்சனல் பிரிவில் மேல்தகவல் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.--------------

நான் குடும்ப ஓய்வூதியம் பெறுகிறேன். என் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். ஒருசில வங்கிகளில் டிபாசிட்கள் வைத்திருக்கிறேன். அனைத்து டிபாசிட்களிலும் முதல் மகனை நாமினியாக போட்டிருக்கிறேன். என் வாரிசுகளாக, இரண்டு மகன்களுடைய பெயர்களையும் சேர்த்திருக்கிறேன். என் மூத்த மகன், டிபாசிட்டு களில் 50 சதவீதத்தை சகோதரனோடு பகிர்ந்து கொள்வான் என்று நம்புகிறேன். இதற்கேற்ப உயில் எழுதி வைத்துவிடுவது சரியாக இருக்குமா?

எஸ்.சுந்தரி, மின்னஞ்சல்.உங்கள் மூத்த மகனை நான் குறை சொல்வதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். மனித மனம் எப்படிச் செயல்படும் என்பதை கணிப்பது அரிதினும் அரிது. உங்கள் டிபாசிட் பணம், இரு மகன்களுக்கும் சரிபாதியாகப் போய்ச் சேர வேண்டும் என்று நீங்கள் விரும்புவது தெரிகிறது. உயில் எழுதி வைப்பது நல்லது. அதைவிட, இன்னொரு சவுகரியமான வேலை, உங்கள் வைப்பு நிதிகள் அனைத்திலும் இருவரையும் நாமினியாக நியமித்து ஒவ்வொருக்கும் தலா 50 சதவீதம் பங்கு என்று குறிப்பிட்டுவிடுங்கள். எங்கே வைப்பு நிதி வைத்திருக்கிறீர்களோ, அங்கே நாமினி திருத்த படிவம் வாங்கி அதில் இருவர் பெயரையும் குறிப்பிட்டு, மேலே சொன்ன திருத்தத்தைச் செய்துவிட்டீர்கள் என்றால், உங்கள் விருப்பப்படி, இருவருக்கும் உங்களுடைய வைப்புநிதித் தொகை போய் சேரும்.

என் முன்னோர் சொத்தில் எனக்கு எந்தவித பங்கோ அல்லது சம்பந்தமோ வேண்டாம் என்பதை சட்டப்படியாக செயல்படுத்துவது எப்படி ? எனக்கு சகோதர, சகோதரிகள் உள்ளனர். என் பங்கை 'கிப்ட் டீடு' என்ற வகையில் கொடுக்க விருப்பமில்லை.

மனோபாலன், மைசூரு.உங்களுக்கு அப்பா இருந்தால் அவரிடம், எனக்கு சொத்தில் பங்கு வேண்டாம், சொத்தைப் பிரிக்கும் உயிலில் என் பெயரைச் சேர்க்கவேண்டாம் என்று தெரிவித்துவிடுங்கள். உங்கள் சகோதர, சகோதரிகளின் பெயருக்கே எழுதிக் கொடுத்துவிட சொல்லுங்கள்; அல்லது இதை எழுத்துப்பூர்வமாக உங்கள் அப்பாவுக்கே எழுதிக் கொடுத்துவிடுங்கள்; அல்லது, சொத்து வந்துவிட்டது என்றால், 'ரிலீஸ் டீடு' எனப்படும் விடுதலைப் பத்திரம் எழுதி, பதிவு செய்துவிட்டால், அந்தச் சொத்தின் பகுதியில் இனிமேல் உங்களுக்கு உரிமை இருக்காது.

நான் பி.எப்., ஓய்வூதியமாக 431 ரூபாய் பெறுகிறேன். இதனை 3,000 முதல் 9,000 ரூபாய் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக யு டியூப் சேனல், 'டிவி'களில் பார்த்தேன். யாரைத் தொடர்பு கொண்டால் தீர்வு கிடைக்கும்? இதனால் தமிழகத்தில் மட்டும் 20 லட்சம் பென்ஷனர்கள் பயனடைவர்.

எஸ்.அய்யப்பன், போடி.மத்திய நிதித் துறையைத் தான் நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பே, பார்லிமென்டரி நிலைக்குழு, பி.எப்., பென்ஷனர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தித் தரச்சொல்லி பரிந்துரை செய்துள்ளது. மத்திய நிதித் துறையில் இருந்து இதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.

கிட்டத்தட்ட 40 ஆண்டு களுக்கு முந்தைய வீடுகளை விற்கும் போது, வருமான வரி எவ்வாறு கட்ட வேண்டும்?

வி.சகுந்தலா, கோவை.வருமான வரிக்கு முன்னர் நீண்டகால மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும். இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, விற்பனை விலைக்கும் வாங்கிய விலைக்கும் இடையே உள்ள லாபத்துக்கு இண்டக்சேஷன் இல்லாமல், 12.50 சதவீத வரி கட்டலாம். அல்லது, இண்டக்சேஷன் வாய்ப்பைப் பயன்படுத்தி, 20 சதவீத வரி கட்டலாம். எது உங்களுக்கு லாபமாக இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு, முடிவு செய்யுங்கள். அருகில் உள்ள நல்ல ஆடிட்டரிடம் போய் கலந்தாலோசியுங்கள். அவர் உங்களுக்கு வழி காட்டுவார்.------------

'பி.எம்.கிசான்' திட்டத்தின் கீழ் 2,000 ரூபாய் பெற்று வந்தேன். கடந்த ஓராண்டாக இந்த தொகை வரவில்லை. வங்கிக்கும் விபரம் தெரியவில்லை. யாரைத் தொடர்புகொள்ள வேண்டும்?

பி.செல்வலட்சுமி, கோவை.பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் பணம் வரவில்லை என்றால், pmkisan-gov.in அல்லது pmkisan-gov.inஎன்ற இ - மெயிலுக்கு விரிவான மின்னஞ்சல் அனுப்பலாம். 011 - -2430 0606 அல்லது 155261 என்ற எண்ணுக்கு அழைத்து, முகவர்களிடம் நேரடியாக புகார் கூறலாம் அல்லது 1800 115 526 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அழைத்தும் விபரம் கேட்கலாம்.வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம். ஆயிரம் சந்தேகங்கள்தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ் gmail.comph:98410 53881


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை