உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / ஆயிரம் சந்தேகங்கள் / ஆ்யிரம் சந்தேகங்கள்: ஐ.பி.ஓ., - என்.எப்.ஓ., வின் போது முதலீடு செய்வது கூடுதல் லாபமா?

ஆ்யிரம் சந்தேகங்கள்: ஐ.பி.ஓ., - என்.எப்.ஓ., வின் போது முதலீடு செய்வது கூடுதல் லாபமா?

எஸ்.ஐ.பி., பிடிப்பதை நிறுத்த நேரடியாக சம்பந்தப்பட்ட இடைத்தரகர் நிறுவனத்துக்கு எழுதலாமா அல்லது முதலீடு செய்த நிறுவனம் வாயிலாகத் தான் செய்ய முடியுமா?

கே.முத்தையா, மதுரைஇன்றைக்கு எல்லா மியூச்சுவல் பண்டு நிறுவனங்களும் வலைதளம் வைத்திருக்கின்றன. எந்த நிறுவனத்தின் பண்டு திட்டத்தில் முதலீடு செய்திருக்கிறீர்களோ, அதன் வலைதளத்துக்குச் சென்று, உங்கள் போலியோ எண், பான் எண் ஆகியவற்றை கொண்டு உள்ளே நுழையுங்கள். நீங்கள் முதலீடு செய்து வரும் பண்டு திட்டத்தின் பெயர், விபரங்கள் அங்கே தெரியும். அதில் போய், 'கேன்சல் எஸ்.ஐ.பி.,' என்ற பொத்தானை தட்டினால் போதும். அல்லது உங்கள் முகவரை கூப்பிட்டு, அதற்கான படிவத்தில் எழுதி, கையெழுத்து போட்டுக் கொடுத்தால் போதும். அவர் உரிய நிறுவனத்துக்கு அனுப்பி, எஸ்.ஐ.பி., பிடிப்பதை நிறுத்த உதவுவார். அது சரி, எதற்கு எஸ்.ஐ.பி.,யை நிறுத்த நினைக்கிறீர்கள்? சிரம காலத்தில் சேமித்தால், அதிக யூனிட்கள் கிடைக்குமே?

மத்திய நிதி அமைச்சர் உத்தரவின்படி, வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் அபராதத் தொகை வசூலிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் உத்தரவு இருந்தால், விபரம் தெரிவிக்கவும். இன்னமும் தனியார் வங்கி ஒன்றில் அபராதத் தொகை பிடிக்கின்றனர்.

வி.இளங்கோவன், சென்னைநிதி அமைச்சர் அப்படி சொல்லவில்லை. ஏழை எளியவர்களுக்கான ஜன் தன் வங்கி கணக்கு மற்றும் அடிப்படை சேமிப்பு கணக்குகளில், குறைந்தபட்ச இருப்பு என்ற வரையறை கிடையாது என்று தெரிவித்தார். மற்றபடி, நவம்பர் 20, 2014 தேதியிட்ட ஆர்.பி.ஐ., உத்தரவுப்படி, சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லையெனில், என்ன விதிமுறைகளை பின்பற்றி வங்கிகள் அபராதம் வசூலிக்கலாம் என்று தெளிவுபடுத்துகிறது. பொதுத் துறை வங்கியான எஸ்.பி.ஐ., மட்டும் தான் இது போன்ற அபராதம் விதிப்பதில்லை.

தற்சமயம் தங்கம் விலை குறைந்துள்ளது. சேதாரம், செய்கூலி தவிர்க்க தங்க நாணயம் வாங்கலாமா? கடைக்கு கடை தர மாறுபாடு இருக்குமா? பின்னாளில் பணத் தேவைக்கு நாணயத்தை கொடுத்தால், நகை கடைக்காரர்கள் பணமாகத் தருவரா? இல்லை, அடகு கடைகளில் கொடுத்து தான் பணமாக்க வேண்டுமா?

குலசை குமார், சென்னைபி.ஐ.எஸ்., ஹால்மார்க் தரச்சான்றுடன் உள்ள தங்க நாணயங்களை வாங்கலாம். எந்தக் கடையில் வாங்கினாலும், இந்த தரக்குறியீடு இருக்குமானால், அதை நம்பலாம். பெரும்பாலும் நகை கடைக்காரர்களே, தங்கம் நிறைய கையிருப்பு வைத்துஉள்ளனர். அதனால், அவர்கள் வாடிக்கை யாளர்களிடம் இருந்து தங்க ஆபரணங்களையோ, நாணயங்களையோ வாங்கி, பணம் தருவதில்லை. ஒன்று, நீங்கள் அந்த நாணயங்களை கொடுத்துவிட்டு, வேறு ஆபரணமாக மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது தங்கம் வாங்குவதற்கென்றே உள்ள தனியார் நிறுவனங்களை அணுகி விற்பனை செய்ய வேண்டும்.

எனக்கு பேரன் பிறந்து 3 மாதங்கள் ஆகிறது. அவனது எதிர்காலத்துக்கு ஏற்ப, நல்ல ரிட்டர்ன் தரக்கூடிய, உரிய முதலீடு வாய்ப்புகளை சொல்லுங்கள். என் மகனும், மருமகளும் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.

ஆர்.ஜானகிராமன், சென்னைஉங்கள் பேரன் பெயரில் உங்கள் மகனை ஒரு 15 ஆண்டுகால பி.பி.எப்., போடச் சொல்லுங்கள். இந்தக் கணக்கில் ஆண்டுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். உங்கள் பேரனுக்கு 18 வயது ஆகும்போது, கணிசமான தொகை சேர்ந்திருக்கும். அதேபோல், பங்கு சந்தை சார்ந்த மூன்று, நான்கு நல்ல மியூச்சுவல் பண்டு திட்டங்களில் எஸ்.ஐ.பி., முதலீடு செய்து வரச் சொல்லுங்கள். அடுத்த 18 ஆண்டுகளில், முதலீட்டுத் தொகை குறைந்தபட்சம் மூன்று மடங்கேனும் பெருகியிருக்கும்.

நான் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கியில், என்னை வற்புறுத்தி இரண்டு முறை காப்பீடு எடுக்க வைத்துவிட்டனர். 4 லட்சம் ரூபாய் ஆண்டு பிரீமியம் கட்ட வேண்டியிருக்கிறது. தற்போது என் குடும்பச் சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது. பிரீமியம் கட்ட முடியாது. பாலிசிகளை கேன்சல் செய்துவிட்டு, பிரீமியத்தை திரும்பத் தாருங்கள் என்று மூன்று முறை கேட்டேன்; முடியாது என்கின்றனர். என் பிரீமியத் தொகையை பெறுவதற்கு தங்களின் மேலான ஆலோசனை வேண்டும்.

எஸ்.நடராஜன், வாட்ஸாப்வங்கியில் இது போன்ற சேவைகளை வாடிக்கையாளர்கள் தலையில் கட்டவேண்டியது அவர்கள் வேலை. ஆனால் வேண்டுமா; வேண்டாமா, பிரீமியம் கட்ட முடியுமா; முடியாதா என்ற முடிவை நீங்கள் அல்லவா எடுத்திருக்க வேண்டும்? சரி, இது ஒரு வகையான 'இன்ஷூரன்ஸ் மிஸ் செல்லிங்' தான். நீங்கள் எழுதிய மின்னஞ்சல்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் குறைதீர் அதிகாரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது நேரடியாக பார்த்து புகார் கொடுக்க முடியும் என்றால் கொடுங்கள். அதற்கு ஒரு ஒப்புகை வாங்கிக் கொள்ளுங்கள். 15 நாட்களுக்குள் உங்கள் குறை தீர்க்கப்படவில்லை என்றால், மத்திய அரசின் பீமா பரோசா (https://bimabharosa.irdai.gov.in/) வலைதளத்தில் புகார் பதிவு செய்யுங்கள். அங்கேயும் உங்களுக்கு 15 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றாலோ அல்லது அவர்கள் கொடுத்த தீர்வு திருப்தி அளிக்கவில்லை என்றாலோ, காப்பீட்டுத் துறை குறைதீர் ஆணையரிடம் (https://www.cioins.co.in/) புகாரைப் பதிவு செய்யுங்கள். இது கொஞ்சம் இம்சையான சட்டப் போராட்டம் தான். உங்கள் விருப்பத்தின்படியே நீங்கள் காப்பீடு எடுத்தீர்கள் என்று நிறுவனம் ஒற்றைக்காலில் நிற்கும். அப்படி நடக்கவில்லை என்று நிரூபிப்பது தான் உங்கள் முன் உள்ள சவால்.

ஐ.பி.ஓ., - என்.எப்.ஓ.,வின் போது முதலீடு செய்வதன் வாயிலாக கூடுதல் நன்மைகள் எதுவும் உண்டா?

வி.எஸ்.ராமு, திண்டுக்கல்இரண்டிலும் எந்த நன்மையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஒரு காலத்தில் நிறுவனப் பங்குகளை ஐ.பி.ஓ.,வில் விலை மலிவாக வாங்கி, நீண்ட காலம் வைத்திருந்து நல்ல லாபம் பார்க்கலாம் என்ற நப்பாசை இருந்தது. இன்று அப்படி இல்லை. சந்தைக்கு வரும்போதே, பல பங்குகளின் விலை உச்சாணிக் கொம்பில் தான் இருக்கின்றன. சந்தையில் பட்டியலிடப்பட்ட பின், அடுத்த ஆறு மாதங்களில், பல பங்குகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து விடுகின்றன. ஐ.பி.ஓ., பட்டியலிடப்படும் லாபம் (லிஸ்டிங் கெயின்) என்றொரு வழிமுறை இருக்கிறது. அலாட் ஆன பங்குகளை, பங்கு பட்டியலிடப்படும் நாளில் விற்பது. இது எல்லா நேரமும் லாபம் தரும் என்று சொல்வதற்கில்லை. முதலில் நல்ல நிறுவன பங்குகளில் அலாட்மென்டே கிடைப்பது இல்லை. பயங்கர அதிர்ஷ்டம் இருந்து, நல்ல பங்குகள் அலாட் ஆகி, அதுவும் நல்ல லாபத்தில் பட்டியலிடப்பட்டால், லாபம் பார்க்கலாம். இது குதிரைக்கொம்பு. மியூச்சுவல் பண்டுகளில், புதிய பண்டு திட்ட அறிமுகமான என்.எப்.ஓ., என்பது சும்மா பரபரப்பு, கவர்ச்சி. இந்த துறையில் எந்த பண்டுகள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன; எவ்வளவு வருவாய் ஈட்டுகின்றன என்பது தான் அளவுகோல். என்.எப்.ஓ.,வை விட, நல்ல வருவாய் ஈட்டும் பண்டு திட்டங்களில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனம்.வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம். ஆயிரம் சந்தேகங்கள்தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ் gmail.com ph: 98410 53881


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ