உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / ஆயிரம் சந்தேகங்கள் / ஆயிரம் சந்தேகங்கள்: வீட்டு கடன் இ.எம்.ஐ.,யை இப்போது மாற்றலாமா?

ஆயிரம் சந்தேகங்கள்: வீட்டு கடன் இ.எம்.ஐ.,யை இப்போது மாற்றலாமா?

தங்க முதலீட்டுப் பத்திரங்கள் இனிமேல் வெளிவராது என்பது உறுதியாகிவிட்டது. வேறு எப்படி தங்கத்தில் முதலீடு செய்வது?

சு.அமுதா, சென்னைதங்க முதலீட்டுப் பத்திரம் தான் வேண்டும் என்று நினைத்தால், ஏற்கனவே வெளியான 67 தவணை தங்க முதலீட்டுப் பத்திரங்கள் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை செகண்டரி மார்க்கெட்டில் வாங்கிக் கொள்ளலாம். மற்றபடி தேவைப்பட்டால், தங்க ஆபரணமாக வைத்துக் கொள்ளுங்கள், அல்லது உங்கள் முதலீட்டு, பொருளாதார வசதிக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் ஓரிரண்டு கிராம் தங்க நாணயங்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஆபரணமாக இருந்தால் சேதாரம், செய்கூலி உண்டு. கூடவே ஜி.எஸ்.டி., உள்ளிட்ட வரிகள். தங்கம் தரும் வளர்ச்சி மட்டும் போதும், வேறு இம்சைகள் வேண்டாம் என்று கருதுபவர்களுக்கு, தங்க இ.டி.எப்., தங்கத்துக்கான மியூச்சுவல் பண்டு திட்டங்களும் தான் நல்ல வழிகள். பணம் கையில் இருக்கும்போதெல்லாம் இ.டி.எப்., யூனிட்களை வாங்கி, உங்கள் டீமாட் கணக்கில் சேமித்துக் கொள்ளுங்கள். வளர்ச்சியும் பாதுகாப்பும் சேர்ந்து கிடைக்கும்.

நான் எஸ்.ஐ.பி., முறையில் மாதம் 5,000 வீதம், ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்புகிறேன். எந்த எஸ்.ஐ.பி. திட்டம் நல்லது?

பி.ரிஷிகேசன், மின்னஞ்சல்.குறிப்பாக எந்த பண்டின் பெயரையும் நான் பரிந்துரை செய்ய இயலாது. நான் அதற்கான 'ஆம்பி' அனுமதி பெற்ற முகவர் இல்லை. இப்படிப் பாருங்கள்... கடந்த 10 ஆண்டு காலத்தில், எந்த பண்டு வகை சிறப்பாக வருவாய் ஈட்டியுள்ளது என்பதை கவனியுங்கள். வழக்கமாக வங்கி தரக்கூடிய 7.50 சதவீதம், தங்கம் தரக்கூடிய 9 சதவீத ரிட்டர்னுக்கு மேல், வருவாய் ஈட்டித்தரும் பண்டுகள் எவை என்பதைத் தேர்வு செய்யுங்கள். பிளெக்சிகேப், மல்டிகேப் பண்டுகள் ஓரளவுக்கு சீரான வருவாயை ஈட்டியுள்ளன. செக்டோரல் பண்டு திட்டங்களுக்குள் போக வேண்டாம். எந்த செக்டார் எப்போது மேலே உயரும், எப்போது தாழ்ந்து போகும் என்பதை கணிக்க முடியாது. இப்படி ஒவ்வொரு அடுக்காக வடிகட்டிக் கொண்டே வந்தால், நீங்கள் முதலீடு செய்ய உகந்த பண்டு திட்டம் கண்ணில் படும்.

ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதே வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ.,யை மாற்றி அமைத்துக் கொள்ளலாமா? அல்லது கடன் செலுத்தும் காலத்தைக் குறைத்துக் கொள்ளலாமா?

ஜி.பாண்டுரங்கன்,வாட்ஸாப்கால் சதவீத குறைப்பு என்பது ஒன்றுமே இல்லை. இ.எம்.ஐ.,யை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு கன்வர்ஷன் கட்டணம் வேறு செலுத்த வேண்டும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். முக்கால் முதல் ஒரு சதவீதம் வரை ரெப்போ வட்டி குறையட்டும். அப்போது உங்கள் கடன் அளவைப் பொறுத்தும், திருப்பிச் செலுத்தும் சக்தியைப் பொறுத்தும் முடிவெடுங்கள். பொதுவாக, இ.எம்.ஐ. தொகையை அப்படியே வைத்துக்கொண்டு, கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை குறைத்துக்கொள்வது தான் லாபகரமானது.

எந்தவித இணையதள திருட்டுக்கும் வாய்ப்பு இல்லாத வகையில், முழுமையாக பாதுகாப்பாக இருப்பதற்கு முன்கூட்டியே தடுக்கும் வழிமுறைகள் எவை?

செ.செல்வக்கோபெருமாள்,காஞ்சிபுரம்.அதற்குத் தான் ஆர்.பி.ஐ., கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா பிரமாதமான இரண்டு புதிய உத்திகளை அறிமுகம் செய்யப் போகிறோம் என்று தெரிவித்து உள்ளார். இனிமேல், இணைய வங்கிப் பரிவர்த்தனைகளின் போது, அங்கீகாரத்துக்கான கூடுதல் கட்டுப்பாடு எனப்படும் 'அடிஷனல் பேக்டர் ஆப் ஆதன்டிகேஷன்' அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், வங்கிகளின் வலைதள முகவரிகள் 'பேங்க்.இன்' என்றும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் வலைதள முகவரிகள் 'பின்.இன்' என்றும் முடியும் வகையில், அவற்றின் பெயர்கள் மாற்றம் செய்யப்படும். இந்த முகவரிகளை, வங்கி அல்லது வங்கியல்லாத நிதி நிறுவனங்களைத் தவிர வேறு யாரும் பெற முடியாது. முகவரிகளைப் பார்த்தே, அவை அசலானவையா, போலியானவையா என்பதை வாடிக்கையாளர்கள் கண்டுபிடித்துவிட முடியும். இணைய பரிவர்த்தனைக்கான பாதுகாப்பில் ஆர்.பி.ஐ., மேற்கொண்டிருக்கும் ஆக்கப்பூர்வமான முயற்சி இது.

வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், சீனியர் சிட்டிசன்களுக்கு வங்கிகளிருந்து கிடைக்கும் வட்டிக்கு ஒரு லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வந்ததே? அது புதிய வரித் திட்டத்துக்கும் பொருந்துமா, இல்லை பழைய வரித் திட்டத்துக்கு மட்டும்தானா?

பி.கே.பாண்டியன், மின்னஞ்சல்டி.டி.எஸ்., பிடித்தத்துக்கும் வரித் திட்டத்துக்கும் சம்பந்தமில்லை. மூத்த குடிமக்களின் சேமிப்புகளின் வாயிலாக கிடைக்கும் வட்டிக்கும், தங்க முதலீட்டுப் பத்திரத்தின் வாயிலாக வரும் வட்டிக்கும், 50,000 ரூபாய் வரை டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்படாமல் இருந்தது. வரும் நிதியாண்டில் இருந்து, இந்த வரையறை ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் வட்டி வருவாய் வருமானால், அந்த வட்டிக்கு 10 சதவீதம் டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்படும். அந்த கூடுதல் வருவாய், உங்கள் மொத்த வருவாயோடு சேர்க்கப்படும். ஒருவேளை உங்கள் மொத்த வருவாய் 12 லட்சம் ரூபாய்க்குள் இருக்குமானால், நீங்கள் எந்த வரியும் செலுத்த வேண்டாம்.

இ.பி.எப்., குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் 1,000 ரூபாய் என்று சொல்லப்படுகிறது. ஆனால், எனக்கு 919 ரூபாய் மட்டும்தான் வருகிறது. தற்போது குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் 7,500 ரூபாயாக கொடுக்கப் போவதாக செய்தி வருகிறதே. அதிலாவது எங்களுக்கு கொடுப்பார்களா?

எஸ்.பாலசுப்பிரமணியன்,வாட்ஸாப்பட்ஜெட்டில் இது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. உங்களைப் போன்ற பலருடைய காத்திருப்பு அப்படியே தொடருகிறது.

நீண்ட கால ஈக்குவிட்டி மியூச்சுவல் பண்டு முதலீடுகளில், பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும் போது பண்டு ஸ்விட்ச்சிங் செய்து, கடன் பண்டுகளில் மாற்றம் செய்வது லாபகரமாக இருக்குமா? அல்லது அந்த பண்டிலிருந்து முழுதுமாக வெளியேறி பிராபிட் புக் செய்து, சந்தை இறக்கத்தில் மறுபடியும் மீண்டும் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்குமா?

ஜெயவேல், காஞ்சிபுரம்.நீண்ட கால ஈக்குவிட்டி மியூச்சுவல் பண்டு திட்டம் நல்ல வருவாய் ஈட்டித் தருகிறது என்றால், எதற்கு பண்டு மாற்றம் செய்யவேண்டும் என்று கருதுகிறீர்கள்? எதற்கு பிராபிட் புக்கிங் செய்யவேண்டும் என்று கருதுகிறீர்கள்? பண்டு திட்டங்கள் ஜாடியில் போட்ட ஊறுகாய் மாதிரி. ஊற ஊற சுவை கூடுவது போல், எவ்வளவு காலம் நீடித்து இருக்கிறதோ, அவ்வளவு துாரம் லாபம் ஈட்டும். ஆத்திர அவசரம், அல்லது உங்கள் இலக்கை ஒட்டிய செலவுக்காக பணத்தை எடுக்கிறீர்கள் என்றால் அதில் ஒரு நியாயம் உண்டு. மற்றபடி, சந்தையின் ஏற்ற இறக்கத்தை பார்த்து, பண்டில் பணத்தை எடுப்பதும் போடுவதும் புத்திசாலித்தனம் அல்ல. அது வர்த்தகர் மனப்பான்மை. முதலீட்டாளராக இருங்கள்.வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம். ஆயிரம் சந்தேகங்கள்தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ் gmail.comph: 98410 53881


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை