புதுடில்லி : மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழு, ஹசாரே குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை நாளையும் தொடர உள்ளதாக அரசு குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் சல்மான் குர்ஷித் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஹசாரே உண்ணாவிரதம் இன்றுடன் 8 வது நாளை தொட்டிருக்கிறது. அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என பிரதமர் மன்மோகன்சிங், மூத்த அமைச்சர்களான பிரணாப்முகர்ஜி, ப.சிதம்பரம், ஏ. கே., அந்தோணி ஆகியோருடன் இன்று காலை முதல் பல்வேறு சந்திப்புக்களை நடத்தியிருக்கிறார். நாளை மாலை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று எதிர்கட்சிகள் ஹசாரே விவகாரத்தை எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது .கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு ஹசாரே விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என பா.ஜ., இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பார்லி., இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மாலை ஹசாரே குழுவை சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து பேசினார். இருதரப்பு பேச்சுவார்த்தை விரைவில் துவங்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
சல்மான் குர்ஷித்துடன் சந்திப்பு: இந்த சந்திப்பு காங்கிரஸ் எம்.பி., சந்தீப் தீக்ஷித் வீட்டில் நடந்தது. இந்த சந்திப்பு குறித்து பேசிய அர்விந்த் கெஜ்ரிவால், இந்த சந்திப்பு குறித்து பேசிய அர்விந்த் கெஜ்ரிவால், அரசுக்கும் எங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு இது முதல் துவக்கம். தற்போது ஏதும் கூற முடியாது. அன்னாவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் சந்திப்பு குறித்து தெரிவிக்கின்றேன் என்றார். சல்மான் குர்ஷித் கூறுகையில், அன்னாவுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்வது மிகவும் முக்கியமானது. சந்திப்பு தொடர்பாக அரசு வட்டாரங்கள் கூறுகையில், சந்திப்பில் முன்னேற்றம் ஏற்பட்டதா என்பதை முன்னரே கூறிவிட முடியாது. இந்த சந்திப்பு பயனுள்ளதாக இருந்ததாக அன்னா குழுவினர் கூறியுள்ளனர். அன்னா உண்ணாவிரதம் துவக்கிய பின்னர் நடைபெறும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து பேசியது குறித்து ராம்லீலா மைதானத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் பேட்டியளித்தார். அப்போது அவர், பேச்சுவார்த்தைக்கு சல்மான் அழைத்தார். அப்போது சல்மான் ஹசாரே குழுவுடன் பேச பிரணாப் முகர்ஜியை அரசு நியமித்துள்ளது. எங்கள் தரப்பில் பேசப்போகும் நபர் குறித்து அன்னா முடிவு செய்வார். நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அன்னா உடல்நிலை குறித்து அரசு கவலை கொண்டுள்ளது என கூறினார்.
தற்போது அரசுடன் ஹசாரே தரப்பில் அர்விந்த் கெஜ்ரிவால் பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை நாளையும் தொடரும்: குர்ஷித் : மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், காங்கிரஸ் எம்.பி., சந்திப் தீக்ஷித் ஆகியோரை ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள அர்விந்த்கெஜ்ரிவால், சாந்தி பூஷன், கிரண் பேடி ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் பேசிய சல்மான் குர்ஷித் பேச்சுவார்த்தை நாளையும் தொடரும் என கூறினார். பின்னர் ஹசாரே குழுவினர் கூறுகையில், எங்கள் கருத்துக்களை அரசு கேட்டது. ஆலோசனைக்கு பின்னர் மீண்டும் பேச உள்ளதாக அரசு தரப்பினர் கூறியுள்ளனர். நாளை வரை அரசு அவகாசம் கேட்டுள்ளது. அன்னா உடல்நிலைமோசமானால் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வோம் என கூறினார். சாந்தி பூஷன் கூறுகையில், அன்னா உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டது. இந்த விஷயத்தில் அன்னாவை சம்மதிக்க வைப்பது மிகவும் கடினம் என கூறினார். கிரண் பேடி கூறுகையில், எழுத்துப்பூர்வமான உறுதி மொழி கொடுக்காதவரை அன்னா உண்ணாவிரதத்தை கைவிடமாட்டார். உறுதிமொழி கொடுக்கும் பட்சத்தில் அன்னா உடனடியாக உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவார் என கூறினார்.
டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தும் பிரதமரை சந்தித்து தற்போதைய நிலைமை குறித்து எடுத்துரைத்தார். ஹசாரேயை கைது செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் காங்., எம்,பி., கூறியிருக்கிறார். இத்துடன் பிரதமர் இந்த விஷயத்தில் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என விரும்புவதாகவும் தெரிகிறது.
இதற்கிடையில் இன்று உண்ணாவிரத மேடையில் பேசிய ஹசாரே நான் எனது போராட்டத்ததை முடித்துக்கொள்ள மாட்டேன். நான் நலமாகத்தான் இருக்கின்றேன். எனது டாக்டர் குழுவினர் என்ன சாக விட்டு விட மாட்டார்கள் என்றார். மார்க்., கம்யூ பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத்த நிருபர்களிடம் பேசுகையில்; ஹசாரே விவகாரத்தில் உரிய முயற்சி எடுத்து போராட்டத்தை நிறுத்த வழி செய்ய வேண்டும் என்றார்.
பேசணுமா ? ராகுல் அல்லது பிரதமர் பேச்சுக்கு வரட்டும்: 'லோக்பால் என்பது, நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தேசிய பிரச்னை. இது தொடர்பாக, எங்களுடன் பேச வேண்டும் என, அரசு தரப்பு விரும்பினால், பிரதமர் மன்மோகன் சிங் அல்லது ராகுல் உள்ளிட்டோர் தான், பேச்சு நடத்த வர வேண்டும்' என, மத்திய அரசுக்கு, அன்னா ஹசாரே குழு, கெடு விதித்துள்ளது. ஊழலுக்கு எதிராக, காந்தியவாதி அன்னா ஹசாரே நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டம், நேற்றும் தொடர்ந்தது. ஹசாரே குழுவினருடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்கு, மகாராஷ்டிர மாநில அதிகாரி உமேஸ் சந்திரா சாரங்கி, ஆன்மிக தலைவர் பையூஜி மகாராஜ் ஆகியோரை, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பிரதிநிதிகளாக, மத்திய அரசு அனுப்பி வைத்தது. இவர்கள், ஹசாரே குழுவினருடன், திரைமறைவில் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள பிரதிநிதிகள் குறித்து, ஹசாரே குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியும், ஹசாரே குழுவைச் சேர்ந்தவருமான கிரண் பேடி, இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,'அரசு தரப்புடன், நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, வதந்திகள் பரப்பி விடப்படுகிறது. பிரச்னையை தீர்க்க வேண்டும் என பிரதமர் விரும்பினால், பேச்சு நடத்துவதற்கான பிரதிநிதியை, அவர் அனுப்பி வைக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
கெடு: இதுகுறித்து ஹசாரே ஆதரவாளர்கள் கூறியதாவது: பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மத்திய அரசு சார்பில் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் மீது, எங்களுக்கு திருப்தி இல்லை. லோக்பால் என்பது, ஒட்டுமொத்த நாட்டு மக்களும், பெரிதும் எதிர்பார்க்கும் தேசிய பிரச்னை. எனவே, இது தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்கு, முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் தான், பேச்சு நடத்துவதற்கான பிரதிநிதிகளாக நியமிக்கப்பட வேண்டும். மாநில அளவிலான அதிகாரிகளை, பேச்சுவார்த்தைக்கு அனுப்புவது நியாயம் அல்ல. பிரதமர் மன்மோகன் சிங், காங்., எம்.பி., ராகுல் அல்லது மத்திய அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்கள் தான், பிரதிநிதிகளாக இடம் பெற வேண்டும். பிரதமர் போன்ற முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் வந்தால் தான், பேச்சு நடத்துவோம். இவ்வாறு, ஹசாரே ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.ஹசாரே குழுவின் இந்த புதிய கெடுவால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஹசாரே தரப்புடன் நேரடியாக பேச்சு நடத்த வேண்டிய சூழ்நிலை, மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஆலோசிப்பதற்கு, மூத்த அமைச்சர்களின் கூட்டத்தை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கூட்டினார்.
தலைவர்கள் வீடுகள் முற்றுகை: 'பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளின் முன், போராட்டம் நடத்த வேண்டும்' என, ஹசாரே குழுவினர் நேற்று முன்தினம் அறிவித்து இருந்தனர். இதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், காங்., எம்.பி.,க்கள், கமல் நாத், சுபோத்காந்த் சகாய், அகர்வால், ப்ரியா தத், பா.ஜ., கட்சியை சேர்ந்த முக்தர் அப்பாஸ் நக்வி, அசோக் அர்கால் ஆகியோரது வீடுகளின் முன், ஹசாரே ஆதரவாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், 'ரகுபதி ராகவ ராஜா ராம்' என்ற பாடலை இசைத்தனர்.
8 வது நாள் : ஹசாரேயின் உண்ணாவிரத அறப்போராட்டம், இன்றுடன் 8 வது நாளாக தொடர்கிறது.நேற்று விடுமுறை நாள் என்பதால், ராம்லீலா மைதானத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.ஹசாரே வாழ்த்து கோஷங்கள், அரசு எதிர்ப்பு கோஷங்கள் என, மைதானத்தில் திரண்டவர்கள், உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டனர்.ஏழு நாட்களாக சாப்பிடாமல் இருப்பதால், ஹசாரே நேற்று மிகவும் சோர்வாக காணப்பட்டார்.பெரும்பாலான நேரங்கள், படுக்கையிலேயே இருந்தார்.ஹசாரேயை, டாக்டர்கள் தொடர்ந்து பரிசோதித்து வருகின்றனர்.உண்ணாவிரதத்துக்கு முன், 72 கிலோவாக இருந்த ஹசாரேயின் எடை, தற்போது ஐந்து கிலோ குறைந்து, 67 கிலோவாகி விட்டது.தொடர்ந்து உணவு உட்கொள்ளாமல் இருப்பதால், கொழுப்புச் சத்தை சிதைக்கும் 'கீடோன்'என்ற பொருள், ஹசாரேயின் சிறுநீர், ரத்தம் ஆகியவற்றில் அதிகரித்துள்ளது.