திருவனந்தபுரம் : பாமாயில் இறக்குமதி முறைகேடு குறித்து, விஜிலென்ஸ் சிறப்பு கோர்ட் விசாரித்து வரும் நிலையில், முதல்வராக உம்மன் சாண்டி நீடிக்கக்கூடாது என்று, மாநில சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியதால், சபையை நேற்று நாள் முழுவதும், சபாநாயகர் கார்த்திகேயன் ஒத்திவைத்தார். கேரள மாநிலத்தில் கே. கருணாகரன் முதல்வராக பதவி வகித்தபோது, நிதி அமைச்சராக, தற்போதைய முதல்வர் உம்மன் சாண்டி பதவி வகித்தார். அப்போது மலேசிய நாட்டிலிருந்து, பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டதில், மாநில அரசுக்கு நஷ்டமேற்பட்டது என, குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, மாநில விஜிலென்ஸ் சிறப்பு கோர்ட் விசாரிக்கிறது. இவ்வழக்கில் உம்மன் சாண்டியின் பங்கு குறித்து மீண்டும் விசாரிக்க, நீதிபதி அனீபா உத்தரவிட்டார். இதை எதிர்த்து, சட்டசபை கொறடா பி.சி.ஜார்ஜ் ஐகோர்ட்டில் சிறப்பு கோர்ட் நீதிபதியை மாற்றக்கோரி, மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி அனீபா வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக, நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று கூடிய மாநில சட்டசபை கூட்டத்தில், எதிர்க்கட்சித் துணை தலைவர் கோடியேறி பாலகிருஷ்ணன், நீதிபதி பின் வாங்கியது குறித்து, சட்டசபையில் விவாதிக்கப்படவேண்டும் என கோரி, சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'பாமாயில் இறக்குமதி முறைகேடுகள் குறித்து நடந்துவரும் விசாரணையை தடுக்க, முதல்வர் உம்மன் சாண்டி முயற்சிக்கிறார். இதற்காக விஜிலென்ஸ்துறை இயக்குனரை பயன்படுத்தினார். அரசுக்குத் தெரிந்து தான் பி.சி. ஜார்ஜை பயன்படுத்தி, இதுபோல் நடந்துள்ளனர். அவரை பயன்படுத்தி வழக்கில் இருந்து தப்பிக்க முதல்வர் முயற்சிக்கிறார். ஒருபக்கம் நீதித்துறையை பாராட்டுவதுபோல் இருந்து விட்டு, மறுபுறம் இதுபோன்ற செயல்களில் அரசு இறங்கி உள்ளது' என குற்றஞ்சாட்டிப் பேசினார்.
சட்டசபையில், எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் பேசுகையில், 'நீதித்துறை சுமுகமாக செயல்பட விடாமல் தடுக்கும் முதல்வர் உம்மன் சாண்டியும், கொறடா பி.சி.ஜார்ஜூம் பதவியில் நீடிக்க உரிமையில்லை' என்றார். தொடர்ந்து சபாநாயகர் கார்த்திகேயன் பேசுகையில், 'இது நீதிமன்றத்தில் உள்ள விவகாரம். இதுகுறித்து இங்கு பேசுவது சரியல்ல' என்றார்.
முதல்வர் உம்மன் சாண்டி பேசுகையில், 'எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் ஆதாரங்கள் இருப்பின், ஏன் இடதுசாரி முன்னணி ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை' என, கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியபடி, சபைக்கு நடுவே திரண்டனர். சபையில் கூச்சல் குழப்பங்களுக்கு இடையே சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதை அடுத்து, நேற்றைய சட்டசபை நடவடிக்கைகள் அத்துடன் முடிந்தது.