ரேஷன் மண்ணெண்ணெய் பதுக்கிய இருவருக்கு "குண்டாஸ்
தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே ரேஷன் மண்ணெண்ணெய் பதுக்கிய தி.மு.க., பிரமுகர் உட்பட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அடுத்த கொம்புதுறையில் சிலவாரங்களுக்கு முன் பதுக்கப்பட்ட 2,700 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெயை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்ய இவற்றை கடத்தி பதுக்கியதாக ஆறுமுகநேரி, வடக்கு சுப்பிரமணியபுரம் பாலமுருகன்(30), காயல்பட்டணம், ஓடைக்கரை தி.மு.க., பிரமுகர் மாதவன்(45) ஆகியோரை கைது செய்தனர். மாதவன் மீது ஏற்கனவே ஒரு ரேஷன் மண்ணெண்ணெய் பதுக்கல் வழக்கு உள்ளது. குண்டர் சட்டத்தில் கைது: உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் ஆலோசனை பேரில், இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், தூத்துக்குடி கலெக்டர் செல்வராஜிற்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவுப்படி பாலமுருகன், மாதவன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையிலடைக்கப்பட்டனர்.