| ADDED : செப் 18, 2011 10:38 PM
புதுடில்லி :பொதுமக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை, ஒழுங்குமுறை படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி, நுகர்வோர் விவகாரத் துறைக்கு, பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:'டிவி' சேனல்களில் வெளியாகும் சில விளம்பரங்கள், மக்களை தவறாக வழிநடத்துகின்றன. மக்களுக்கு தவறான தகவல்களை கூறி, அவர்களை ஏமாற்றும் வகையில், இந்த விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன. இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில், மத்திய அரசு இறங்கியுள்ளது. பிரதமரின் முதன்மை செயலர் டி.கே.ஏ.நாயர், மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அதிகாரிகளுடன், இதுகுறித்து சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.இதன்பின், விளம்பரங்களை ஒழுங்குமுறை படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி, நுகர்வோர் விவகாரத் துறைக்கு, பிரதமர் அலுவலகம் சார்பில் உத்தரவிடப்பட்டது. இது தொடர்பான வழிகாட்டும் குறிப்புகளை உருவாக்கும்படியும், நுகர்வோர் விவகாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.