உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எஸ்.பி.ஐ., மற்றும் பி.என்.பி., வங்கிகளில் உள்ள.. கணக்கை மூடுங்க! கர்நாடக முதல்வர் உத்தரவு

எஸ்.பி.ஐ., மற்றும் பி.என்.பி., வங்கிகளில் உள்ள.. கணக்கை மூடுங்க! கர்நாடக முதல்வர் உத்தரவு

பெங்களூரு : கர்நாடகாவில், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான வால்மீகி வளர்ச்சி ஆணையத்தின் முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதில் தொடர்புடைய பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகளில் உள்ள கணக்குகளை உடனடியாக மூடும்படி அனைத்து துறைகளுக்கும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக வால்மீகி வளர்ச்சி ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதன் கண்காணிப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்த சந்திரசேகர் பெங்களூரில் உள்ள வீட்டில் கடந்த மே மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த குறிப்பில், 'வால்மீகி வளர்ச்சி ஆணையத்தில் 187 கோடி ருபாய் ஊழல் நடந்துள்ளது. இதற்கு உடந்தையாக இருக்க மறுத்ததால், தனக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது' என, குறிப்பிட்டிருந்தார்.

௧௧ பேர் கைது

இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. வால்மீகி வளர்ச்சி ஆணைய நிர்வாக இயக்குனர் பத்மநாபா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். துறையை நிர்வகித்து வந்த அமைச்சர் நாகேந்திராவும் கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார். இந்த முறைகேட்டில், எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பி.என்.பி., எனப்படும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணம் பிற வங்கிகளுக்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, கர்நாடக தொழில் துறை மேம்பாட்டு வாரியம் டிபாசிட் செய்த 12 கோடி ரூபாயை திருப்பி தரும்படி இரு வங்கிகளையும் மாநில அரசு கோரியது. ஆனால், அதை தராமல் வங்கிகள் இழுத்தடித்து வந்தன. இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றுடனான பரிவர்த்தனைகளை உடனடியாக நிறுத்தும்படி அனைத்து துறைகளுக்கும் கர்நாடக அரசு நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா ஒப்புதல் பெறப்பட்டு, மாநில நிதித் துறை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வால்மீகி வளர்ச்சி ஆணைய முறைகேட்டில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வால்மீகி ஆணையத்துக்கு சொந்தமான 187 கோடி ரூபாய் வேறு வங்கி கணக்குகளுக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளது. மொத்த தொகையில் 88.62 கோடி ரூபாய் ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள கூட்டுறவு வங்கி உள்ளிட்ட கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி கணக்கில் இருந்த பணமும் இதுபோல் மாற்றப்பட்டுள்ளது. கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பாரத ஸ்டேட் வங்கியில் டிபாசிட் செய்த 10 கோடி ரூபாய் கடந்த 2013ல் போலி ஆவணங்கள் வாயிலாக தனியார் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

பண பரிவர்த்தனை

இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இருப்பினும், அரசுக்கு தர வேண்டிய கோடிக்கணக்கான பணம் திருப்பித் தரப்படவில்லை. ஆகையால், பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ள கணக்குகளை, மாநில அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைகள் ஆகியவை உடனடியாக மூட வேண்டும். இந்த வங்கிகளுடனான பணப் பரிவர்த்தனைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கூடுதலாக முதலீடு எதுவும் செய்யக்கூடாது. இரு வங்கிகளிலும் உள்ள கணக்குகளை முடித்து, நிதியை திரும்பப் பெறுவதற்கான செயல்முறையை அனைத்து துறைகளும் செப்டம்பர் 20ம் தேதிக்குள் முடித்து, அது தொடர்பான விபரங்களை நிதித் துறை துணைச் செயலருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

JAYAKUMAR V
ஆக 16, 2024 21:08

பொறுப்பற்ற உத்தரவு , தவறு செய்தவர்களை காப்பாற்றும் முயற்சி


Tetra
ஆக 16, 2024 19:46

ஊழல் செய்து விட்டு வகைகளை பேசும் காங்ரஸ். இவர்கள் போன் மூலம் யாருக்காவது பணம் கொடுக்க சொல்லியிருப்பார்கள். வங்கிகள் மறுத்திருக்கும். அவ்வளவுதான் கன்னட பெருமை வந்திருக்கும். போட்றா வெடியை என்று சித்து உத்தரவு வந்திருக்கும்


Sitaraman Munisamy
ஆக 16, 2024 14:39

மூடுவது சரி. அந்த கணக்குகளில் உள்ள பணத்தை எந்த வங்கிகளில் மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கவில்லை.


Murugan
ஆக 16, 2024 10:39

எல்லாமே திருட்டு பசங்க என்ன செய்வது. அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கும் என்ற திமிர் இவர்களை ஒடுக்க அதிகாரம் குறைக்க படவேண்டும். கிராம மக்களுக்கு அதிகாரம் வழங்கவேண்டும். மக்களிடம் வந்து கையெழுத்து வாங்க அவர்கள் வீட்டு வாசற்படியில் நின்றால் தெரியும்.


அப்பாவி
ஆக 15, 2024 13:22

எல்லோரும் திருடர்கள். எவனும்.மாட்ட மாட்டான். மாட்டுனாலும் நம்ம உளுத்துப்.போன சட்டங்களை வெச்சு ஆதாரமே இல்லைன்னு விடுதலையாகி வந்துருவங்க.


RAAJ68
ஆக 15, 2024 08:50

நல்ல ஆப்பு வச்சாரு சித்தராமய்யா. ஸ்டேட் பேங்க்ல வேலை செய்றவங்க எல்லாருக்கும் திமிரு. ஒழுங்கா பதில் சொல்ல மாட்டாங்க. எரிச்சலா பேசுவாங்க என்னமோ இவங்க பிச்சை போடுவது மாதிரி. மக்களோட பணத்துல தான் இவங்களுக்கு சம்பளம் கிடைக்கிறது. எல்லாரும் கணக்கை க்ளோஸ் பண்ணி விட்டால் இவங்களுக்கு எப்படி சம்பளம் கிடைக்கும். அந்த கவுண்டருக்கு போங்க இந்த கவுண்டருக்கு போங்க என்று அலைக் கழிப்பாங்க. தனியார் வங்கிகளுக்கு சென்றால் நம்மை உட்கார வைத்து மரியாதையாக பேசி நமக்கு என்ன வேண்டுமோ அதை உடனே செய்து கொடுப்பார்கள். அவர்களிடமிருந்து இவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.


Kasimani Baskaran
ஆக 15, 2024 05:48

நூதன மோசடி போல தெரிகிறது. பத்துக்கு மேற்பட்ட மனைகளை அபகரித்து ஆட்சி நடத்தும் முதல்வரின் ஆட்சியில் கிடைத்தவரை லாபம் என்றுதான் செயல்படுவார்கள்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை