| ADDED : ஜூன் 23, 2024 06:29 AM
மாலுார்: ''மாலுாரின் டவுன் சபைக்கு உட்பட்ட 11 வார்டுகளுக்கு முதல் கட்டமாக எரகோள் அணையில் இருந்து இம்மாதம் 24ம் தேதி முதல் குடிநீர் வழங்கப்படும்,'' என்று மாலுார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா தெரிவித்தார்.மாலுாரின் மாருதி நகரில் அமைந்துள்ள மேல் நிலைத்தொட்டியில் எரகோள் நீர் நேற்று முன் தினம் நிரப்பப்பட்டது. இதனை பார்வையிட்ட பின், அவர் அளித்த பேட்டி:மாலுார் டவுன் சபையின் 22 வார்டுகளில் முதல் கட்டமாக 1, 2, 3, 7, 8, 9, 10, 12, 13, 14, 16 ஆகிய 11 வார்டுகளுக்கு வரும் 25 ம் தேதி முதல் எரகோள் குடிநீர் வழங்கப்படும்.இதை 15 நாட்களுக்கு யாரும் குடிநீராக பயன்படுத்த வேண்டாம். அதன் பிறகே குடிநீராக பயன்படுத்தலாம். அதுவரை பாத்திரங்கள் சுத்தப்படுத்தவும், ஆடைகளை துவைக்கவும், குளிக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.மாலுாரின் தொட்டகெரே ஏரியை மேம்படுத்தி, மாநிலத்தில் மாதிரி ஏரியாக தரம் உயர்த்தப்படும். மாலுாரில் பெரிய பூங்கா, அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படும். முக்கியமாக நடைபயிற்சியாளர்களுக்கு 'வாக்கிங் டிராக்' அமைக்கப்படும். எத்தினஹொளே நீர் மாலுாருக்கு கொண்டு வரப்பட்டு, அனைத்து ஏரிகளிலும் நிரப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.