உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 25 பரிசுகளை அள்ளிய சிறு மலரின் திருக்குறள் ஆர்வம்

25 பரிசுகளை அள்ளிய சிறு மலரின் திருக்குறள் ஆர்வம்

தெள்ள தெளிவாக தமிழில் படபடவென பொரிந்து தள்ளி, திருக்குறளை அள்ளித்தருகிறார் சிறுமி மாஹேரா, 8.தங்கவயல் மாரிகுப்பத்தில் வசித்து வரும் சிறுமலரான மாஹேரா, ஆங்கில தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பில் சேர்ந்துள்ளார். இவரது தாய் மொழி உருது; கல்வி கற்பது ஆங்கிலம்.இவருக்கு விவாதம், மேடை, பட்டிமன்றம் உட்பட பல கலை நிகழ்ச்சிகளை காண்பதில் ஆர்வம் உள்ளது. மொபைல் போன்களில் 'கேம்ஸ்' விளையாடுவதை தவிர்த்து, 'திருக்குறள்' பற்றி அறிந்து கொள்ள தனது தாய் பர்ஹானிடம் கேட்டு உள்ளார்.மகளின் விருப்பத்தை நிறைவேற்ற, திருக்குறள் அறிந்தவர்களிடம் கேட்டு மகளுக்கு சொல்லி கொடுத்துள்ளார். திருக்குறளையும், அதன் பொழிப்புரையையும் ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்து உள்ளார்.

ஒப்புவிக்கும் போட்டி

தங்கவயலில் 2022ம் ஆண்டு, அனைத்து பள்ளிகள் பங்கேற்கும் 'சிறுவர்களுக்கான திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி' நடப்பதாக அறிவித்திருந்தனர். இப்போட்டியில் பங்கேற்க விரும்புவதாக, மாஹேரா, தனது தாயிடம் கூறியுள்ளார். மகளின் விருப்பத்தை நிறைவேற்ற, 10 திருக்குறளை ஒப்புவிக்க பயிற்சி அளித்தார். நான்கே நாட்களில் சிறுமி மனப்பாடம் செய்தார். போட்டியில் பங்கேற்று அசத்தினார்.இதைத் தொடர்ந்து தங்கவயல் தமிழ்ச்சங்கம், நாம் தமிழர் கலை இலக்கிய பாசறை உட்பட பல அமைப்புகள் நடத்திய திருக்குறள் போட்டிகளில் பங்கேற்றார். இதுவரை 25க்கும் மேற்பட்ட பரிசுகளை பெற்றுள்ளார். தற்போது, நுாற்றுக்கும் மேற்பட்ட திருக்குறளை பொழிப்புரையுடன் ஒப்புவிக்கிறார்.

ஆக்கம், ஊக்கம்

சிறுமிக்கு தாய் பர்ஹான் தான் ஆக்கம், ஊக்கம் அளித்து வருகிறார். மூன்று மாத குழந்தையாக இருந்தபோதே, சிறுமியின் தந்தை முன்வர் பாஷா காலமானார்.மகளை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர, பல இன்னல்களை தாங்கினார். சிறுவர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தார்; பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.தாய் கூறுகையில், ''என் மகளை, மாவட்ட கலெக்டர் ஆக்க வேண்டும்; எல்லா மொழிகளையும் கற்றறிய வேண்டும். அவரது ஆர்வத்தை அலட்சியப்படுத்தாமல் ஊக்கப்படுத்தி வருகிறேன்,'' என்றார்.

சபதம்

சிறுமி மாஹேரா, தமிழை ஆன்லைன் மூலம் படித்து வருகிறார். இரண்டாம் கட்ட பாடம் கற்று முடித்து, மூன்றாம் கட்ட பாடம் படித்து வருகிறார்.சிறுமி கூறுகையில், ''நான் செயின்ட் மேரிஸ் பள்ளியில் மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்று நான்காம் வகுப்புக்கு சென்றுள்ளேன். ஆங்கிலத்துடன் தமிழும் கற்க உதவியாக இருக்கின்றனர். ''திருக்குறளின் 1330 குறள்களையும் பொழிப்புரையுடன் மனப்பாடம் செய்வதை சபதமாக கொண்டு உள்ளேன். நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் திருக்குறளில் உள்ளதாக என் தாய் கூறியுள்ளார்,'' என்றார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Suresh
ஜூன் 23, 2024 13:55

திருக்குறளை மனப்பாடம் செய்வதை விட அதில் சொன்ன கருத்துக்களை பின்பற்றுவது தான் சிறப்பு.


Rangarajan
ஜூன் 23, 2024 13:18

ஆஹா நல்ல விஷயம். வாழ்க வாழ்க வளர்க. விளையும்பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கான சாட்சி. அவரின் மொபைல் எண் கிடைத்தால், போனில் பேசி வாழ்த்தலாம் கிடைக்குமா?


rsudarsan lic
ஜூன் 23, 2024 09:45

வாழ்த்துக்கள். தினமலருக்கு ஒரு வேண்டுகோள். இது போன்ற சாதனையாளர்களை ஆண்டு முழுதும் நினைவு கொள்ள வழிவகை செய்யுங்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை