முதல்வருடன் 3 அமைச்சர்கள் திடீர் சந்திப்பு
பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவை, மூன்று அமைச்சர்கள் நேற்று திடீரென சந்தித்து பேசினர்.'மூடா' முறைகேடு விவகாரம், முதல்வர் சித்தராமையாவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அவர், ஒருவேளை ராஜினாமா செய்தால் பதவியை பிடிக்க மூத்த அமைச்சர்கள் காய் நகர்த்தி வருகின்றனர்.உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீ ல் ஆகியோர் போட்டியில் உள்ளனர். துணை முதல்வர் சிவகுமாரும் முயற்சி செய்கிறார்.இந்நிலையில், முதல்வரை பெங்களூரு காவேரி இல்லத்தில் பரமேஸ்வர், சதீஷ் ஜார்கிஹோளி, எம்.பி.பாட்டீல் ஆகிய மூவரும் நேற்று திடீர் என சந்தித்து பேசினர். நாகமங்களா கலவரம் குறித்து, பரமேஸ்வர் விளக்கம் அளித்து உள்ளார். மற்ற இருவரும் சந்தித்த காரணம் தெரியவில்லை. அமைச்சர்கள் சென்ற பின், பா.ஜ., -- எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பாரும், முதல்வரை சந்தித்து பேசினார். இவர், ஏற்கனவே பா.ஜ.,வில் அதிருப்தியில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.