| ADDED : மே 28, 2024 06:20 AM
விஜயபுரா: முத்தேபிகலில் காதல் விவகாரம் தொடர்பாக, காதலன் உட்பட நான்கு பேர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விஜயபுரா மாவட்டம், முத்தேபிகல் தவல்கி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராகுல் ராமன் கவுடா, ஐஸ்வர்யா. இருவரும் ஐந்தாறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் ராகுலிடம் இருந்து ஐஸ்வர்யா விலக துவங்கினார்.இதனால் கோபமடைந்த ராகுல், நேற்று முன்தினம் தாய்மாமா வீட்டில் தங்கியிருந்த காதலியின் வீட்டுக்கு பெட்ரோல் கேனுடன் சென்றார். தனக்கு, ஐஸ்வர்யாவை திருமணம் செய்து வைக்கும்படி கூறினார்.இதனால் அவருக்கும், காதலியின் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த ராகுல், தன் கையில் இருந்த பெட்ரோல் கேனை, தன் மீதும், அவர்கள் மீதும் ஊற்றினார். அவரை தடுப்பதற்குள் தீ வைத்தார்.இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர், இவர்களை காப்பாற்றி, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், 80 சதவீத தீக்காயத்துடன், ராகுல் ஆபத்தான நிலையில் உள்ளார்.ஐஸ்வர்யாவின் தாய்மாமா முத்து, அத்தை சீமா, வீட்டில் பணியாற்றும் நீலகண்டன் ஆகியோர் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சீமா, அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். மற்றவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் தொடர்பாக இரு வீட்டினரும், முத்தேபிகல் போலீசில் புகார் அளித்துள்ளனர். பெட்ரோலை யார் கொண்டு வந்தது என்பது தொடர்பாக, சம்பவ இடத்திற்கு சிறப்பு குழுவினர் ஆய்வு செய்து, கைரேகை பதிவு எடுத்து உள்ளனர். இச்சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.