உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 50 பேர் அடங்கிய நிழல் அமைச்சரவை; ஒடிசாவில் நவீன் பட்நாயக் அதிரடி

50 பேர் அடங்கிய நிழல் அமைச்சரவை; ஒடிசாவில் நவீன் பட்நாயக் அதிரடி

புவனேஸ்வர்:ஒடிசா அமைச்சரவையின் நடவடிக்கைகளை கண்காணிக்க முதன்முறையாக, பிஜு ஜனதா தள தலைவர்கள் 50 பேர் அடங்கிய நிழல் அமைச்சரவையை, முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் அமைத்துள்ளார்.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஒடிசா சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்தை பா.ஜ., வீழ்த்தியது. மொத்தமுள்ள 147 தொகுதிகளில், 78ல் வெற்றி பெற்ற அக்கட்சி, அங்கு முதன்முறையாக ஆட்சி அமைத்தது. முதல்வராக மோகன் சரண் மஜி பதவிேயற்றார். தேர்தலில் 51 தொகுதிகளில் வென்ற பிஜு ஜனதா தளம், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. எதிர்க்கட்சித் தலைவராக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்பட்டார். புதிய சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஒடிசாவில் நாளை துவங்குகிறது. இந்நிலையில், பா.ஜ., அமைச்சரவையின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க, பிஜு ஜனதா தள கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் 50 பேர் அடங்கிய நிழல் அமைச்சரவையை நவீன் பட்நாயக் உருவாக்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள பிஜு ஜனதா தளம், 'நிழல் அமைச்சரவைக் குழுவில் பெரும்பாலும் முன்னாள் அமைச்சர்களே இடம்பெற்றுள்ளனர். 'இந்தக் குழு, அமைச்சர்கள் துறை ரீதியாக முறையாக செயல்படுகின்றனரா; திட்டங்களை நிறைவேற்றுகின்றனரா என்பதை தீவிரமாக கண்காணிக்கும். இது தொடர்பான அறிக்கையை நவீன் பட்நாயக்கிடம் சமர்ப்பிக்கும்' என கூறப்பட்டுள்ளது. அரசியலுக்கு முந்தைய தன் வாழ்க்கையை பெரும்பாலும் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் செலவழித்த நவீன் பட்நாயக், அங்கு பின்பற்றப்படும் நிழல் அமைச்சரவை திட்டத்தை ஒடிசாவில் முதன்முறையாக முன்னெடுத்துள்ளார். தேர்தல் தோல்வியால் பிஜு ஜனதா தளத்தின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக விமர்சிக்கப்பட்ட நிலையில், நவீன் பட்நாயக்கின் நிழல் அமைச்சரவை திட்டம், ஒடிசா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை