உடுப்பி: கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. உடுப்பியில் 7,000 பாக்கு, ரப்பர் மரங்கள் சேதம் அடைந்துள்ளன.கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. பெங்களூரு, மைசூரு, ஹாசன் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. தற்போது தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஆனால் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி, புத்துார், தர்மஸ்தலா, குக்கே, சூரத்கல், முல்கி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. தொழுவம் இடிந்தது
உடுப்பி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. சங்கரநாராயணா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட குளஞ்சே கிராமத்தில் பெய்த கனமழையால், சுபா நாயக் என்பவருக்கு சொந்தமான மாட்டு தொழுவம் இடிந்து விழுந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக மாடுகளுக்கு எதுவும் பாதிப்பு இல்லை.அம்மாசேபைலு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரத்தாடி, டேங்கூர், நடம்பூர், ஜட்டின கத்தே கிராமங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மேற்கண்ட கிராமங்களில் 5,000 பாக்கு மரங்கள், 2,000 ரப்பர் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன.பைந்துார் தாலுகா படகேரி, அரகோலா, சிக்கள்ளி ஆகிய கிராமங்களில், மரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் 40 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. குந்தாபூரில் உள்ள துர்கா பரமேஸ்வரி கோவிலை மழை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளப்பெருக்கு
உத்தர கன்னடாவின் எல்லாப்பூர் அருகே பசன குளி கிராமத்தில் ஓடும் கங்காவலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பசனகுளி- - ராமனகுளி கிராமங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.சிர்சியில் பெய்யும் கனமழையால் அகநாசினி, சியாமளா நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வரதா ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.ஹொன்னவர் அருகே வர்ணகேரி கிராமத்தின் வழியாக செல்லும், எடப்பள்ளி- பன்வல் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலையில் மண் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் நேற்று போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட துாரத்திற்கு அணிவகுத்து நின்றன.கர்நாடகாவின் அண்டை மாநிலமான மஹாராஷ்டிராவிலும் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பெலகாவி கானாபுராவில் ஓடும் மல்ல பிரபா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.ஆற்றங்கரையை ஒட்டி உள்ள, ஆஞ்சநேயா கோவில் மூழ்கியுள்ளது. பெலகாவி மாச்சி கிராமத்தில் கனமழைக்கு மரங்கள் சாய்ந்து விழுந்ததில் 40 வீடுகள் சேதமடைந்தன.4.7.2024 / சுப்பிரமணியன்5_Rain_0001கங்காவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பசனகுளி -- ராமனகுளி ஊர்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.5_Rain_0002அகநாசினி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.5_Rain_0003கனமழையால் மாட்டு தொழுவத்தின் மேற்கூரை பறந்து சேதமடைந்துள்ளது.5_Rain_0004சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ரத்தாடி கிராமத்தில் பாக்கு மரங்கள் சாய்ந்துள்ளன.5_Rain_0005குமட்டா -- சிர்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளத்தில் சிக்கிய ஆம்னி பஸ்.5_Rain_0006பகலில் பெய்த சாரல் மழையால், பிலிகிரிரங்கநாத சுவாமி கோவில் கோபுரம், பனி மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இடம்: சாம்ராஜ்நகர்.5_Rain_0007திடீரென காலையில் சாரல் மழை பெய்ததால், குடை பிடித்தபடி பள்ளிக்கு சென்ற மாணவியர். இடம்: ஹொன்னாளி, தாவணகெரே.