குஜராத்தில் ஆற்றில் மூழ்கி 8 பேர் பலி
ஆமதாபாத், குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம், வாஷ்னா சோக்தி கிராமத்தை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலையை கரைப்பதற்காக கிராமத்துக்கு அருகேயுள்ள மேஷ்ரோ ஆற்றுக்கு நேற்று மாலை சென்றனர். அப்போது ஆற்றின் ஆழமான பகுதியில் இறங்கி குளித்த எட்டு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து நீரில் மூழ்கி உயிரிழந்த எட்டு பேரின் சடலங்களை மீட்டனர். மாயமானதாக கருதப்பட்ட மேலும் ஒருவர் வீடு திரும்பினார். இதை தொடர்ந்து மேலும் யாராவது நீரில் மூழ்கி உள்ளனரா என, தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.