மேம்பாலத்தில் இருந்து விழுந்த கார்: தமிழக வாலிபர் பலி; மூவர் சீரியஸ்
யஷ்வந்த்பூர் : சாங்கே சாலையில் இருந்து துமகூரு சாலையை நோக்கி, தமிழக பதிவு எண் கொண்ட, 'வோக்ஸ் வேகன்' கார் நேற்று அதிகாலை 3:45 மணியளவில் பெங்களூரு யஷ்வந்த்பூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பை தாண்டி, எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதி, பாலத்தில் இருந்து கீழே பாய்ந்தது.அந்நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஹொய்சாளா போலீசார், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், விபத்தில் சிக்கிய காரில் இருந்தவர்களை மீட்டனர்.காரில் பயணித்த தமிழகம் சேலத்தைச் சேர்ந்த சபரீஷ் சிவதாஸ், 29, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் பயணம் செய்து படுகாயமடைந்த சங்கர் ராம், 29, அனுஸ்ரீ, 23, மிதுன், 29, இரு சக்கர வாகன ஓட்டி மஞ்சுநாத், 38, ஆகியோர், மணிப்பால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காரில் பயணம் செய்த மூன்று பேர், உடல்நிலையும் மோசமாக உள்ளது. காரில் பயணம் செய்தவர்கள், பெங்களூரு ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். மல்லேஸ்வரத்தில் உள்ள தங்களின் நண்பர்களை பார்க்கச் செல்லும்போது, விபத்து நேர்ந்துள்ளது.இது தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, 'காரை ஓட்டியவர் மது அருந்தினாரா என்று தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே தெரிய வரும்' என்றனர்.பெங்களூரு யஷ்வந்த்பூர் மேம்பாலத்தில் பைக் மீது மோதி, கீழே பாய்ந்த காரில் பயணம் செய்த தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார். அவருடன் பயணம் செய்த மூன்று பேர், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.