உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சர்கள் தலை மீது தொங்கும் கத்தி செயல் திறனை கண்காணிக்கும் மேலிடம்

அமைச்சர்கள் தலை மீது தொங்கும் கத்தி செயல் திறனை கண்காணிக்கும் மேலிடம்

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல் திறனில், அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ் மேலிடம், தங்கள் செயல் திறனை நிரூபிக்க, சில அமைச்சர்களுக்கு டிசம்பர் வரை கால அவகாசம் அளித்துள்ளது. நிரூபிக்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. அரசு அமைந்த சில மாதங்களில், அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொண்டர்கள், தலைவர்களை பொருட்படுத்துவதில்லை. அவர்களின் பிரச்னைகளை கேட்பதில்லை என, அதிருப்தி தெரிவித்தனர்.

நிர்ணயம்

இந்த வேளையில், லோக்சபா தேர்தலில், இவர்களின் செயல் திறனை பரிசோதிக்க, காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. அதிக தொகுதிகளில் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயித்தது. முதல்வர் சித்தராமையா, தொகுதிகளின் பொறுப்பு அமைச்சர்களிடம் ஒப்படைத்திருந்தார்.ஆனால் வெறும் ஒன்பது தொகுதிகளில் மட்டுமே, காங்கிரஸ் வெற்றி பெற்றது. குறிப்பாக தங்களின் சட்டசபை தொகுதியிலேயே, கட்சி வேட்பாளருக்கு அமைச்சர்களால் 'லீட்' கொடுக்க முடியவில்லை. இதை டில்லி மேலிடம் தீவிரமாக கருதியது. இத்தகைய அமைச்சர்களை நீக்கி விட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என, பல தரப்பிலும் நெருக்கடி ஏற்பட்டது.சிலர், அமைச்சராக பொறுப்பேற்ற பின், அரசின் இமேஜை அதிகரிக்க முயற்சிக்கவில்லை. துறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டு வரவில்லை. மக்கள், தொண்டர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் பணியாற்றவில்லை என்பதை, மேலிடம் உன்னிப்பாக கவனித்தது.

முட்டுக்கட்டை

ஆகஸ்ட் இறுதியிலோ அல்லது செப்டம்பர் முதல் வாரத்திலோ, அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முதல்வர் சித்தராமையா முட்டுக்கட்டை போட்டார். தற்போதைய சூழ்நிலையில் அமைச்சரவையை மாற்றி அமைப்பது, சரியாக இருக்காது.வால்மீகி மேம்பாட்டு ஆணையம், மூடா முறைகேடு தொடர்பான சர்ச்சை அதிகரிக்கும் நிலையில், அமைச்சரவையை மாற்றி அமைப்பது சரியல்ல. அமைச்சர்கள் தங்கள் செயல் திறனை நிரூபிக்க கால அவகாசம் அளிக்கலாம் என, ஆலோசனை கூறினார். மேலிடமும் தன் எண்ணத்தை மாற்றி கொண்டது.இதை தொடர்ந்து டிசம்பர் வரை அமைச்சர்களுக்கு, கால அவகாசம் அளித்துள்ளது. அதற்குள் தங்களின் செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும். தலைவர்கள், தொண்டர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.இல்லையென்றால் அவர்களை பதவியில் இருந்து நீக்கி, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க மேலிடம் திட்டமிட்டுள்ளது. எனவே அமைச்சர்களின் நடவடிக்கையை உன்னிப்பாக கவனிக்க துவங்கியுள்ளது.பதவி பறிபோகும் வாய்ப்புள்ள அமைச்சர்கள், கிலி அடைந்துள்ளனர். அதே நேரம் அமைச்சர் பதவி மீது கண் வைத்துள்ள எம்.எல்.ஏ.,க்கள், சுறுசுறுப்படைந்துள்ளனர். மேலிடத்தின் கவனத்தை தங்கள் வசம் திருப்பி, அமைச்சரவையில் இடம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை