உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிருப்தி குழுவால் ஆட்டம் காணும் பதவி; தந்தையை போல மகனுக்கும் சிக்கல்

அதிருப்தி குழுவால் ஆட்டம் காணும் பதவி; தந்தையை போல மகனுக்கும் சிக்கல்

கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தது. பா.ஜ., 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்தது.மாநில தலைவராக இருந்த நளின்குமார் கட்டீலை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக புதிய தலைவரை நியமிக்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்தது.

கடும் போட்டி

தலைவர் பதவிக்கு முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, முன்னாள் அமைச்சர்கள் ரவி, அரவிந்த் லிம்பாவளி, மத்திய அமைச்சர் ஷோபா, எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் உள்ளிட்ட தலைவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது.ஆனால், முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனது செல்வாக்கை பயன்படுத்தி, தன் மகன் விஜயேந்திராவுக்கு தலைவர் பதவி வாங்கி கொடுத்தார். இது மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை.விஜயேந்திரா தலைவர் ஆன புதிதில், அவரை கட்சி தொண்டர்கள் ஆஹா... ஓஹோ... என்று கொண்டாடினர். சட்டசபை தேர்தலில் எடியூரப்பாவும், விஜயேந்திராவும் காங்கிரஸ் தலைவர்களுடன் உள் ஒப்பந்த அரசியல் செய்து, கட்சியை தோற்கடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதற்கிடையில் மாவட்ட தலைவர்கள், கட்சியின் பொது செயலர் உள்ளிட்ட பதவிகளுக்கு கட்சியினரை நியமித்ததில் விஜயேந்திரா தன்னிச்சையாக செயல்பட்டதாக கட்சிக்குள் அதிருப்தி எழுந்தது.அவருக்கு எதிராக மூத்த தலைவர்கள் செயல்பட ஆரம்பித்துள்ளனர். விஜயேந்திராவை தலைவர் பதவியில் இருந்து இறக்கியே தீர வேண்டும் என்ற முனைப்பில், எத்னால் தலைமையில் ஒரு குழு செயல்பட ஆரம்பித்துள்ளது.இதில் மிகவும் முக்கியமானவர் ரமேஷ் ஜார்கிஹோளி. விஜயேந்திராவை மாநில தலைவராக நியமித்த போதே, ரமேஷ் கடும் அதிருப்தி தெரிவித்தார். 'எங்களை விட இளையவரான விஜயேந்திரா தலைமையில் நாங்கள் செயல்பட வேண்டுமா' என்று கேட்டார்.

முக்கிய பங்கு

ஆனால் ரமேஷை, விஜயேந்திரா சமாதானப்படுத்தினார். பின், ரமேஷை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இதனால் தற்போது அவர் கடும் கோபத்தில் உள்ளார். காங்கிரஸ்- ம.ஜ.த., கூட்டணி ஆட்சியை கவிழ்த்ததில் ரமேஷுக்கு முக்கிய பங்கு உண்டு.தற்போது பா.ஜ.,விலும் கலகம் செய்ய ஆரம்பித்துள்ளார். இதனால் கட்சிக்கு எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது என்பதற்காக, ரமேஷிடம் பேச்சு நடத்த மேலிடம், அவரை டில்லிக்கு அழைத்துள்ளது.எடியூரப்பா முதல்வராக இருந்த போதும் அவருக்கு எதிராக ஒரு குழு செயல்பட்டது. அந்த குழுவின் போராட்டத்தால், எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து கீழே இறக்கப்பட்டார்.அவரது மகனுக்கு எதிராகவும், இப்போது ஒரு குழு செயல்பட்டு வருகிறது. தந்தை வழியில் மகனும் தலைவர் பதவியில் இருந்து இறக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.- -நமது நிருபர் - -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை