ஜிகா தொற்று பரவல் பீதி கர்ப்பிணியருக்கு தனி பிரிவு
பெங்களூரு: பெங்களூரில் டெங்கு காய்ச்சலுடன், ஜிகா வைரஸ் தொற்றும் மக்களை வாட்டி வதைக்கிறது. மாநிலத்தில் இதுவரை ஒன்பது பேருக்கு ஜிகா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. ஷிவமொகாவில் ஒருவர் பலியானார்.ஜிகா தொற்றால் பாதிக்கப்பட்டோரில், பெங்களூரை சேர்ந்தவர்களே அதிகம். இந்த தொற்று கர்ப்பிணியரை அதிகம் தாக்கும் என, மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இதை தீவிரமாக கருதிய சுகாதாரத்துறை, கர்ப்பிணியரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. அவர்களுக்கு தனி பரிசோதனை பிரிவு அமைக்க முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரின் ஜிகனியில், கர்ப்பிணி உட்பட ஆறு பேருக்கு ஜிகா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இருவர் குணமடைந்தனர். நால்வர் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் மூவர் கர்ப்பிணியர்.ஜிகா தொற்று குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும். எனவே, கர்ப்பிணியருக்கு தனி பரிசோதனை பிரிவு அமைக்கப்படுகிறது. இந்த தொற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட சிகிச்சையோ, தடுப்பூசியோ இல்லை. தொற்று கர்ப்பிணியருக்கு அதிக அபாயத்தை ஏற்படுத்தும்.தாய்க்கு ஜிகா தொற்று ஏற்பட்டால், சிசு, மைக்ரோசெபாலி நோய்க்கு ஆளாகும் வாய்ப்புள்ளது. சிசுக்களுக்கு சிறிய தலை, மூளை வளர்ச்சி குறைவாக இருக்கும். எனவே கர்ப்பிணியர் உஷாராக இருப்பது நல்லது.காய்ச்சல், தலைவலி, கண்கள் சிவப்பாக மாறுவது, உடல் வலி இருந்தால், உடனடியாக டாக்டரை நாடி சிகிச்சை பெறுவது அவசியம். வீடு மற்றும் வீட்டின் சுற்றுப்புறத்தில் கொசுக்கள் பரவாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.