விமான கடத்தல் தொடரில் திரிப்பா? மத்திய அரசிடம் நெட்பிளிக்ஸ் விளக்கம்
புதுடில்லி : 'நெட்பிளிக்ஸ்' ஓ.டி.டி., தளத்தில் வெளியாகியுள்ள ஐ.சி., 814: தி காந்தஹார் ஹைஜாக் இணைய தொடரில், பயங்கரவாதிகள் கதாபாத்திரங்கள் சிலவற்றுக்கு ஹிந்துக்கள் பெயர் வைத்தது சர்ச்சையானது.இந்நிலையில், 'இனி வரும் தொடர்கள், படங்களில் தேசிய உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்' என, நெட்பிளிக்ஸ் உறுதி அளித்துள்ளது.கடந்த 1999ல், நம் அண்டை நாடான நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து, டில்லிக்கு புறப்பட்ட, ஐ.சி., 814 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை, பாக்., ஆதரவு பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தானின் காந்தஹார் விமான நிலையத்திற்கு கடத்திச் சென்றனர். அதிலிருந்த, 155 பயணியரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு, நம் நாட்டு சிறையில் இருந்த மசூத் அசார் உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க கோரினர். ஒரு பயணியை பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொன்றனர்.அரசு வேறு வழியின்றி பயங்கரவாதிகளை விடுவித்து, பயணியரை மீட்டது. இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, பாலிவுட் இயக்குனர் அனுபவ் சின்ஹா ஐ.சி., 814: தி காந்தஹார் ஹைஜாக் என்ற இணைய தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடர் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி., தளத்தில் வெளியானது.இதில் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள் கதாபாத்திரத்தின் பெயர்கள் ஹிந்து பெயராக உள்ளதாக புகார் எழுந்தது.'அந்த பெயர்கள் கடத்தல் சம்பவத்தின் போது பயங்கரவாதிகள் தங்கள் அடையாளத்தை மறைப்பதற்காக பயன்படுத்திய போலி பெயர்கள்.முறையான ஆய்வுக்கு பின் அதை அப்படியே பயன்படுத்தினோம்' என, இயக்குனர் குழுவைச் சேர்ந்த முகேஷ் சப்ரா தெரிவித்திருந்தார்.இந்நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், நெட்பிளிக்ஸ் இந்தியா கன்டென்ட் தலைவர் மோனிகா செர்கிலுக்கு சம்மன் அனுப்பியிருந்தது.அதன்படி அவர் நேற்று தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் இணை இயக்குனரை சந்தித்து பேசினார்.அப்போது அவரிடம், 'நெட்பிளிக்ஸின் எதிர்கால தொடர்கள், படங்கள் ஆகியவை நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இருக்கும்' என்று உறுதியளித்தார்.மேலும், கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் பெயர்கள் தொடர்பான விளக்கத்தை, தொடரின் ஆரம்பத்தில் எழுத்து வடிவில் விளக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தவறுகளை சுட்டிக்காட்டிய நிஜ பைலட்!
ஐ.சி., 814: தி காந்தஹார் ஹைஜாக் தொடரில், விமானத்தின் கழிப்பறை பைப் லைனில் ஏற்பட்ட அடைப்பை பைலட் தானே இறங்கி சரிசெய்வது போன்ற காட்சியும், பயணியர் விடுவிக்கப்பட்ட பின் வெளியே வரும் பைலட்டுக்கு வெளியுறவு அமைச்சர் சல்யூட் அடிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.காந்தஹார் விமான கடத்தலின் போது உண்மையில் பைலட்டாக இருந்த கேப்டன் தேவி சரண், இந்த இரு காட்சிகள் சற்றே மிகைப்படுத்தப்பட்டவை என கூறியுள்ளார். 'கழிப்பறை அடைப்பை சரிசெய்ய தலிபான் அதிகாரிகள், தொழிலாளர்களை அனுப்பினர். அவர்களுக்கு பைப்லைன் இருக்கும் இடம் தெரியாது என்பதால், நான் அவர்களை விமானத்தின் கீழே அழைத்து மட்டும் சென்றேன். பயங்கரவாதிகள் எங்களை விடுவித்த பின், வெளியே வந்த போது, முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங், எங்கள் முயற்சிகளை பாராட்டும் வகையில் கை குலுக்கினார்' என்று தெரிவித்தார்.