| ADDED : மே 16, 2024 06:07 AM
குடகு : காபி தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.குடகு மடிகேரி அருகே சித்தாபுரா கிராமத்தில் உள்ள, காபி தோட்டங்களில் புகுந்து கடந்த சில தினங்களாக, ஒரு காட்டு யானை அட்டகாசம் செய்தது. காபி தோட்ட தொழிலாளர்களை விரட்டியது. இதனால் அந்த காட்டு யானையை பிடிக்க வேண்டும் என்று, கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, காட்டு யானையை பிடிக்க, எட்டு கும்கிகள் வரவழைக்கப்பட்டன. வனஅதிகாரி ஜெகன்நாத் தலைமையில் காட்டு யானையை தேடும் பணி, கடந்த இரண்டு நாட்களாக நடந்தது.இந்நிலையில் நேற்று மதியம் சித்தாபுரா அருகே எம்மேகுந்தி கிராமத்தில் காட்டு யானை நின்றது. இதுபற்றி அறிந்த வனத்துறையினர் அங்கு சென்றனர். துப்பாக்கி மூலம் காட்டு யானை மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அங்கிருந்து ஓடிய யானை சிறிது துாரத்தில், மயங்கி விழுந்தது.பின் யானையின் உடலில் கயிற்றால் வனத்துறையினர் கட்டினர். மயக்கம் தெளிந்ததும் யானை பிளிறியது. கும்கிகள் ஆசுவாசப்படுத்தி அழைத்து சென்றன. லாரியில் ஏற்றப்பட்டு அங்கிருந்து யானை கொண்டு செல்லப்பட்டது. அந்த யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்படும் என்று, வனத்துறையினர் கூறி உள்ளனர். ***