| ADDED : மே 04, 2024 10:54 PM
பெலகாவி: பெலகாவி பா.ஜ., வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு, பல்வேறு மடாதிபதிகள் ஆசி வழங்கினர்.ஹூப்பள்ளியில் உள்ள மூறுசாவர மடத்தின் மடாதிபதி குருசித்த ராஜயோகேந்திர சுவாமிகள் உட்பட பல்வேறு மடாதிபதிகள் பெலகாவிக்கு நேற்று சென்றிருந்தனர்.இந்த வேளையில், விஸ்வேஸ்வரய்யா நகரில் உள்ள மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்கடி வீட்டில், பெலகாவி பா.ஜ., வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர் இருந்துள்ளார். அங்கு சென்ற மடாதிபதிகளின் காலில் விழுந்து ஜெகதீஷ் ஷெட்டர் ஆசி பெற்றார்.இந்த சந்திப்புக்கு பின், குருசித்த ராஜயோகேந்திர சுவாமிகள் கூறியதாவது:ஹூப்பள்ளியில் உள்ள மூறுசாவர மடத்துக்கும், ஜெகதீஷ் ஷெட்டர் குடும்பத்துக்கும் பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. தனிப்பட்ட வேலையாக பெலகாவி வந்தேன். ஜெகதீஷ் ஷெட்டர் இங்கு இருப்பதாக தகவல் கிடைத்தது. அவரை சந்தித்து ஆசி வழங்க வந்தேன்.தேர்தல் நெருங்கும் வேளையில், அவரை சந்தித்து ஆசிர்வாதம் செய்வதில் எந்த உள்நோக்கமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.