உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மெய்டி ஆதரவு ஆயுத குழு மீது நடவடிக்கை: பைரேன் சிங் உறுதி

மெய்டி ஆதரவு ஆயுத குழு மீது நடவடிக்கை: பைரேன் சிங் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்,: ''கூகி சமூகத்தினருக்கு எதிராக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால், மெய்டி ஆதரவு ஆயுதக் குழுவான ஆரம்பாய் தென்கோல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் தெரிவித்துள்ளார்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.

பெரும் சேதம்

இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னையில், கூகி மற்றும் மெய்டி சமூகத்தினர் இடையே, கடந்தாண்டு மே மாதம் மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறி, பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தற்போது ஓரளவுக்கு அமைதி ஏற்பட்டாலும், பிரச்னை தொடர்கிறது.இந்நிலையில், மெய்டி சமூகத்தினருக்கு ஆதரவான, ஆரம்பாய் தென்கோல் என்ற ஆயுதம் ஏந்திய குழு, பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கூகி சமூகத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இது குறித்து முதல்வர் பைரேன் சிங் கூறியுள்ளதாவது:இந்த அமைப்பு ஒரு கலாசார அமைப்பாகவே இருந்தது. மாநிலத்தின் மோதல் துவங்கிய நேரத்தில், போதிய போலீஸ் இல்லாத நிலையில் அவர்கள் ஆயுதத்தை எடுத்துள்ளனர். இந்த அமைப்புடன் பேச்சு நடத்தப்பட்டது. மத ரீதியிலோ, தேச விரோதமாகவோ செயல்படக்கூடாது. அவ்வாறு கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்றும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருவர் பலி

இதனால், கடந்த ஐந்து மாதங்களாக அமைதி நிலவுகிறது. இதை மீறி அவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, மேற்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள கொடூர்ன் என்ற கிராமத்தில் வசிப்பவர்கள் மீது, ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் நேற்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில் ஒரு பெண் உட்பட இருவர் பலியாகினர். ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதை அடுத்து, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
செப் 02, 2024 05:50

மியான்மார் எல்லைகளை திறந்து வைத்துக்கொண்டு என்றும் தீர்வு காண வாய்ப்பில்லை. எல்லைகளை மூடி அன்னியர்களை வெளியேற்ற வேண்டும். கள்ளக்குடியேறிகளுக்கு மனிதாபிமானம் காட்டுவதால் நல்லது நடக்க வாய்ப்பு இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை