உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசை முடக்க மத்திய அரசு சதி குற்றச்சாட்டு!

காங்கிரசை முடக்க மத்திய அரசு சதி குற்றச்சாட்டு!

வங்கியில் உள்ள பணத்தை தேர்தலுக்கு செலவிட முடியாமல் தடுத்து, காங்கிரஸ் கட்சியை பொருளாதார ரீதியாக முடக்க பிரதமர் முயற்சி செய்வதாக, கார்கே, சோனியா, ராகுல் ஆகியோர் குற்றஞ்சாட்டினர். நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், பெறப்பட்ட 20,000 ரூபாய்க்கு மேலான நன்கொடை விபரங்களை ஆண்டுதோறும் அறிவித்து வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்கின்றன.வருமான வரி சட்டப்பிரிவு '13ஏ' கீழ் வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகின்றன.கடந்த 2018- - 19ம் நிதிஆண்டுக்கான வருமான வரி கணக்கு விபரங்களை காங்கிரஸ் தாக்கல் செய்ய தவறியது. இதையடுத்து, அவர்கள் பெற வேண்டிய வருமான வரி விலக்கை இழந்தனர். இது தொடர்பாக, 2021ல் காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அக்கட்சியிடம் இருந்து முறையான பதில் வராததை அடுத்து, அக்கட்சிக்கு சொந்தமான பல்வேறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

பிரச்னை

இவை தொடர்பான வழக்கு விசாரணையின் போது, இது முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியின் தவறு என டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, ஏப்., 1ல் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே, தேர்தல் செலவுக்கு கூட பணமில்லை என, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமீபத்தில் தெரிவித்தார்.லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, முதல்கட்ட ஓட்டுப்பதிவுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கிவிட்ட நிலையில், வங்கிக் கணக்குகளை அணுக முடியாமல் காங்., தலைமை தவித்து வருகிறது.நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா, அக்கட்சியின் எம்.பி., ராகுல் உள்ளிட்டோர் செய்தியாளர்களை நேற்று கூட்டாக சந்தித்து முறையிட்டனர். அப்போது சோனியா பேசியதாவது:காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பது மிக மிக தீவிரமான பிரச்னை. இது, காங்.,கை மட்டும் பாதிக்கவில்லை; நம் ஜனநாயகத்தின் அடிப்படையையே அசைத்து பார்க்கிறது. காங்.,கை பொருளாதார ரீதியாக முடக்க பிரதமர் மோடி திட்டமிட்டு முயற்சி செய்கிறார். பொது மக்களிடம் இருந்து நாங்கள் பெற்ற நன்கொடை பணம் முடக்கப்பட்டுஉள்ளது. எங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து வலுக்கட்டாயமாக பணம் எடுக்கப்பட்டுள்ளது. சவாலான இந்த தருணத்திலும், லோக்சபா தேர்தல் பிரசாரம் முடங்கி விடாமல் இருக்க, எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம். தேர்தல் பத்திர விற்பனையால் பா.ஜ., மிகப் பெரிய அளவில் பலன் அடைந்துள்ளது. அதே நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான எங்கள் நிதி, வேண்டுமென்றே முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.காங்., - எம்.பி., ராகுல் கூறியதாவது:பிரதமரும், உள்துறை அமைச்சரும் சேர்ந்து எங்கள் வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளது கிரிமினல் செயல்பாடு. எங்களால் தேர்தல் பிரசாரம் செய்ய முடியவில்லை. நாட்டில் ஜனநாயகம் என்பது இல்லை. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என இந்தியாவை குறிப்பிடுவது பொய். நாட்டின் ஜனநாயக கட்ட மைப்பை காப்பாற்ற வேண்டிய அமைப்புகள் இருந்தும் எதுவும் நடக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.காங்., தலைவர் கார்கே பேசுகையில், ''லோக்சபா தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டுமெனில், எங்கள் வங்கிக் கணக்குகளை நாங்கள் அணுக, அரசியலமைப்பு நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்.

ஏகபோக உரிமை

''அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியலமைப்பு நிறுவனங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படுத்தக் கூடாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் வளங்களின் மீது ஏகபோக உரிமை வைத்திருக்கக் கூடாது,'' என்றார்.

தேர்தல் கமிஷனில் காங்., புகார்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், சுப்ரியா ஸ்ரீநாத் ஆகியோர், டில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனர்களை சந்தித்து, பா.ஜ.,வுக்கு எதிராக பல்வேறு புகார் மனுக்களை நேற்று அளித்தனர்.அதன் விபரம்:பல ஆண்டுகளுக்கு முன்பே, நீதித்துறையால் முடித்து வைக்கப்பட்ட 2ஜி வழக்கு குறித்து மீண்டும் தவறான விளம்பரங்களை பா.ஜ., செய்து வருகிறது. அந்த விளம்பரங்களை நீக்கி, அதை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் நிதியை பயன்படுத்தி, 'மோடி குடும்பம்' என்ற விளம்பரங்கள் நாடு முழுதும் செய்யப்படுகின்றன; அவற்றை அகற்ற வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ள பா.ஜ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.

தோல்வியை பார்த்து பயம்: பா.ஜ., தலைவர் பதிலடி

காங்.,கின் குற்றச்சாட்டுக்கு, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பதிலடி தந்துள்ளார். அவர் கூறியதாவது:காங்கிரஸ் கட்சி, மக்களால் முற்றிலுமாக நிராகரிக்கப்படப் போகிறது. அந்த வரலாற்று தோல்வியை எதிர்கொள்ள பயந்து, ஜனநாயகம் மற்றும் அமைப்புகளின் மீது குற்றஞ்சாட்ட துவங்கியுள்ளனர். தங்கள் தவறை திருத்திக் கொள்ளாமல், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு அதிகாரிகளை குறை கூறுகின்றனர். 'பாக்கி உள்ள வரியை முறையாக செலுத்துங்கள்' என, வருமான வரி குறை தீர்ப்பு தீர்ப்பாயமும், டில்லி உயர் நீதிமன்றமும் தெரிவித்துவிட்டன. ஆனால், அதை செலுத்த அவர்கள் தயாராக இல்லை.ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு மாநிலத்திலும், வரலாற்றின் ஒவ்வொரு தருணத்திலும் கொள்ளையடித்த ஒரு கட்சி, நிதியின்றி தவிப்பதாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஜீப் முதல் போபர்ஸ் வரை அவர்கள் கொள்ளையடித்து சேர்த்து வைத்துள்ள பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்தட்டும்.இந்தியா ஜனநாயக நாடு என்பது பொய் எனக் கூறும் பகுதி நேர தலைவருக்கு, ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.கடந்த 1975 - 77 காலகட்டத்தில் சில மாதங்களுக்கு நம் நாடு ஜனநாயக நாடாக இல்லை. அப்போது, நாட்டில் பிரதமராக இந்திரா இருந்தார்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Lion Drsekar
மார் 23, 2024 11:46

ஒவ்வொரு தேர்தலுக்கு ஒவ்வொரு செய்தி வெளியிடுவது வழக்கம் தேர்தல் நடந்து கொண்டு இருக்கும்போதே வெளிநாட்டுக்கு செல்வதும் வழக்கம் வெள்ளம் வந்தாலும் பஞ்சம் வந்தாலும் அவர்களுக்கு ஒரு கவலையும் இல்லை பாராட்டுக்கள், வந்தே மாதரம்


Jai
மார் 22, 2024 22:15

திமுகாவிடம் கடன் வாங்கி கொள்ளுங்கள். அன்றைய நிதியமைச்சர் பி டி ஆர் ஆடியோவில் மிகப்பெரிய அமௌன்ட் எங்கு வைப்பது என்று வாரிசு திணருவதாக அவருடைய குரலில் பதிவாகியுள்ளது.


குமரி குருவி
மார் 22, 2024 13:23

பா.ஜ.க.காங்கிரஸ் இல்லாத பாரதம் என பகிரங்கமாக தானே...சொல்கிறது...இதில் அழிக்கப் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு எதற்கு....


பேசும் தமிழன்
மார் 22, 2024 10:25

கான் கிராஸ் கட்சியை தான் மக்கள் தேர்தலின் மூலம் விரட்டி அடித்து முடக்கி விட்டார்களே.... 10 ஆண்டுகளாக எதிர்கட்சி அந்தஸ்து கூட பெறாமல் போய் விட்டது கான் கிராஸ் கட்சி... அது தான் இத்தாலி போலி காந்தி கும்பல் சாதனை !!!


Kasimani Baskaran
மார் 22, 2024 05:39

மத்திய அரசுக்கு பாராட்டுகள்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி