அமித் ஷா இமாலய வெற்றி
லக்னோ:பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தன் சொந்த மாநிலமான குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில், லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். இத்தொகுதியில் அவரை எதிர்த்து, காங்கிரசின் சோனால் ராமன்பாய் படேல் போட்டியிட்டார். நேற்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி, சோனால் ராமன்பாய் படேலை, 7.44 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமித் ஷா தோற்கடித்தார். கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், 5.57 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமித் ஷா வெற்றி பெற்ற நிலையில், தற்போது அதை விட அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார். ஸ்மிருதி தோல்வி
உத்தர பிரதேசத்தில், காங்கிரஸ் கோட்டையாகக் கருதப்படும் அமேதி தொகுதியில், 2019 தேர்தலில், அக்கட்சியின் எம்.பி., ராகுலை, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி தோற்கடித்தார். இந்த முறையும் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற கனவில் இருந்த அவர், மீண்டும் அதே தொகுதியில் களம் கண்டார். ஆனால், ஸ்மிருதி இரானியை எதிர்த்து, முன்னாள் பிரதமர் ராஜிவின் விசுவாசியான கிஷோரி லால் சர்மா களமிறக்கப்பட்டார். தற்போது அவர், 70,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், ஸ்மிருதி இரானியை வீழ்த்தி, காங்கிரசின் கோட்டையை மீட்டெடுத்துள்ளார். மேனகாவும் வீழ்ந்தார்
சோனியாவின் உறவினரான மேனகா, பா.ஜ., சார்பில் சுல்தான்பூரில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் ராம்புவால் நிஷாத், 36,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.