வறட்சியில் இருந்து மக்களை காக்க, அகத்திய முனிவர் மழை பெய்ய வேண்டி தவம் செய்த இடம் ஆனேகுட்டே கோவில். இத்தலம், உடுப்பி மாவட்டத்துக்கும், உத்தர கன்னடா மாவட்டத்தின் கார்வார் இடையே உள்ள கும்பாஷி என்ற இடத்தில் அமைந்து உள்ளது. கும்பாஷி
இக்கோவில் விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதை கர்நாடகாவின் ஏழு 'முக்தி ஸ்தலங்கள்' என்றும் அல்லது பரசுராமா கோவில்களில் ஒன்று என்றும் அழைக்கின்றனர். 'ஆனே' என்றால் யானை; 'குட்டே' என்றால் குன்று என்பதுடன், யானை தலை கடவுள் வீற்றிருக்கும் மலை என்பதாகும்.இக்கோவிலை கும்பாஷி என்றும் அழைக்கின்றனர். முன்பொரு காலத்தில், இப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. எனவே, மழை பெய்ய வேண்டி, வானத்தில் இருந்து அகத்திய முனிவர் வருகை தந்து தவம் செய்தார். இதை கலைக்க கும்பாசுரா என்ற அரக்கன் முற்பட்டான். அரக்கனை தடுக்க, பாண்டவர்களின் பீமனிடம் விநாயகர் கேட்டு கொண்டு, ஆயுதம் வழங்கினார். இந்த ஆயுதத்தால், அரக்கனை இதே இடத்தில் பீமன், வதம் செய்தார்.கோவிலின் பிரதான கருவறையில், நின்ற கோலத்தில் கம்பீரமான விநாயகர் வீற்றிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி முக்கிய திருவிழாவாகவும்; சங்கடகர சதுர்த்தியும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி அன்று கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. டிசம்பர் முதல் வாரத்தில் இங்று தேர் திருவிழா நடக்கிறது.இங்கு, விலை மதிப்பற்ற பொருட்களை சுவாமிக்கு காணிக்கையாக பக்தர்கள் துலாபாரம் செலுத்துகின்றனர். எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து ரயிலில் உடுப்பிக்கு செல்லலாம். அங்கிருந்து 31 கி.மீ., தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. அங்கிருந்து பஸ், டாக்சி மூலமும் செல்லலாம். அதுபோன்று பெங்களூரில் இருந்து பஸ்சும் இயக்கப்படுகிறது.தினமும் காலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். மேலும் விபரங்களுக்கு 74060 93533 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.- நமது நிருபர் -