உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆதிஷியை தேர்வு செய்து அரவிந்த் கெஜ்ரிவால்...புதுக்கணக்கு!:டில்லி மக்களுக்கு 3வது பெண் முதல்வர்

ஆதிஷியை தேர்வு செய்து அரவிந்த் கெஜ்ரிவால்...புதுக்கணக்கு!:டில்லி மக்களுக்கு 3வது பெண் முதல்வர்

டில்லி முதல்வராக தன் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஆதிஷியை தேர்வு செய்து, அரவிந்த் கெஜ்ரிவால் புதுக்கணக்கை துவக்கியுள்ளார். 11 ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாவது முறையாக மீண்டும் பெண் ஒருவர் முதல்வராகிறார்.டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால், கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு, கடந்த வாரம், சுப்ரீம் கோர்ட், நிபந்தனை ஜாமின் வழங்கியது.முதல்வர் அலுவலகம் செல்லக் கூடாது; முதல்வருக்கான கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது என்றெல்லாம் அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.இதனால், முதல்வர் பதவியில் தொடர முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டது. இது, மக்கள் மத்தியில், தன் இமேஜ், கட்சியின் செல்வாக்கு ஆகியவற்றை பாதிக்கும் என்று கருதிய அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்தார்.தங்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், ''17ம் தேதி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறேன். டில்லி சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலோடு, முன்கூட்டியே டில்லி சட்டசபைக்கும் தேர்தல் நடத்தும்படி பரிந்துரை செய்யலாம். அவ்வாறு, முன்கூட்டியே தேர்தல் நடைபெறாத நிலையில், புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார்,'' என அதிரடியாக அறிவித்திருந்தார்.இதனால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அறிவித்தபடி, நேற்று காலை ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம் நடைபெற்றது.கூட்டம் துவங்கியதும் மூத்த தலைவர் திலீப் பாண்டே எழுந்து, ''புதிய முதல்வர் யார் என்பது குறித்தும், அவரது பெயரை முடிவு செய்தும் கெஜ்ரிவால் அறிவிப்பார்,'' என்றார்.அரவிந்த் கெஜ்ரிவால் எழுந்து, ஆதிஷியின் பெயரை, முன்மொழிவதாக அறிவித்தார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் எழுந்து நின்று, கைதட்டி வழிமொழிந்து, ஒருமனதாக ஆதிஷியை தங்கள் கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவராக தேர்வு செய்தனர்.இதன் வாயிலாக, டில்லி அரசுக்கு, மூன்றாவது முறையாக பெண் ஒருவர் முதல்வராக தேர்வு செய்யப்படுகிறார். இதற்கு முன்பு, காங்கிரசை சேர்ந்த ஷீலா தீட்சி, பா.ஜ.,வைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் டில்லி முதல்வர் நாற்காலியை அலங்கரித்துள்ளனர்.அவர்கள் வரிசையில், தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு, முதல்வர் பதவியில், மீண்டும் ஒரு பெண் அமர்கிறார்.

ஆட்சியில் முக்கியத்துவம்

அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில், நீர், பொதுப்பணித்துறை, திட்டமிடல், நீர், மின்சாரம், கல்வி, உயர் கல்வி, சேவைகள், விழிப்புணர்வு மற்றும் மக்கள் தொடர்பு என 11க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளை, ஆதிஷி மர்லினாசிங் கவனித்து வந்தார்.டில்லி அமைச்சரவையில், தற்போதுள்ள அமைச்சர்கள் எவரிடமும், இத்தனை இலாகாக்கள் இல்லை. இத்தனைக்கும் இவர், கடந்த ஆண்டுதான் அமைச்சராக பதவியேற்றார். இவரது செயல்பாடுகள், சிறப்பாக இருந்ததால், அடுத்தடுத்து பல துறைகள் வழங்கப் பட்டன. கடந்த 2013ல் தான் ஆம் ஆத்மி கட்சியில் ஆதிஷி இணைந்தார். கட்சியின் கொள்கைகளை வகுப்பதில், இவர் முக்கிய பங்காற்றினார். அப்போது முதலே, டில்லியில் கல்வி சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில், மிகுந்த ஆர்வம் காட்டினார்.கடந்த 2015ல், துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின், ஆலோசகராக ஆதிஷி நியமிக்கப்பட்டார். அதிலிருந்து, கல்வித்துறையில், மிகப்பெரிய மாற்றங்கள், மள மளவென கொண்டுவரப்பட்டன. இது அத்தனைக்கும், ஆதிஷியே காரணம்.டில்லியில் உள்ள அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளியில் மேலாண்மை குழுக்களை அமைத்தல், தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்தல் உள்ளிட்ட, பல்வேறு திட்டங்களை, அதிரடியாக மேற்கொண்டார்.டில்லியின் கல்காஜி தொகுதியிலிருந்து, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிஷிக்கு, வயது 43. மதுபான ஊழல் முறைகேடு வழக்கில், மனிஷ் சிசோடியா மற்றும் கெஜ்ரிவால் ஆகியோர், சிறைக்குச் சென்ற பிறகு, அரசின் அனைத்து நடவடிக்கைகளையும், மிக திறமையாக கையாண்டும், ஊடகங்கள் மத்தியில், அனைத்து அறிவிப்புகளையும், முதன்மையாக இருந்து செய்து வந்தவர் ஆதிஷி என்பது, குறிப்பிடத்தக்கது.

பயோடேட்டா!

1981, ஜூன் மாதம்,8 ம் தேதி பிறந்த ஆதிஷியின் தந்தை விஜய் சிங், தாய் திரிப்தா வாஹி என இருவருமே டில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள். ஹிந்து பஞ்சாபி மற்றும் ராஜ்புத் குடும்பத்தை சேர்ந்த ஆதிஷியின் இயற்பெயர் ஆதிஷி மர்லினா சிங். இருப்பினும் 2018 முதல் ஆதிஷி என்ற பெயரை மட்டுமே, பயன்படுத்துகிறார்.டில்லியிலேயே பிறந்து வளர்ந்த ஆதிஷி, இங்குள்ள புகழ் பெற்ற ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியில், பள்ளிப்படிப்பை முடித்து, மற்றொரு புகழ் பெற்ற செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாறு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பிறகு, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் சென்று, அங்கு வரலாறு முதுகலைப் படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'முகத்தை மாற்றலாம் - குணத்தை மாற்ற முடியாது'

முதல்வராக ஆதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, டில்லி மாநில பா.ஜ.,தலைவரான, வீரேந்திர சச்தேவா கூறியதாவது:ஆதிஷியை, அரவிந்த் கெஜ்ரிவால் நியமனம் செய்துள்ளாரே தவிர, முதல்வராக தேர்வு செய்யப்படவில்லை. ஆதிஷி முதல்வராகியுள்ளதற்கு, முழுக்க முழுக்க காரணம், மனீஷ் சிசோடியாதான். அவரிடமிருந்து வந்த நெருக்கடியே, இதற்கு காரணம்.உண்மையில், ஆதிஷியை முதல்வராக்குவதற்கு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விருப்பமில்லை. கெஜ்ரிவாலின் தேர்வு, ஆதிஷி அல்ல. முக்கியமான பல்வேறு இலாக்காக்களை, ஆதிஷியிடம் வழங்கப்பட்டது கூட, சிசோடியா கொடுத்த அழுத்தமே காரணம். அவர்தான், ஆதிஷிக்கு இத்தனை பொறுப்புகளை வழங்கும்படி, வலியுறுத்தினார்.டில்லி அரசின் முகத்தை மாற்ற முடியும். ஆனால் கட்சியின் குணாதிசயத்தை மாற்ற முடியாது. டில்லியை அரவிந்த் கெஜ்ரிவால் சூறையாடியது மக்களுக்கு தெரியும். அவர்கள் ஒவ்வொரு துறையிலும் ஊழல் செய்துள்ளனர். இப்போது அந்த ஊழலுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்.யார் முதல்வராக இருந்தாலும் சரி, அரவிந்த் கெஜ்ரிவாலின் 10 ஆண்டுகால ஊழலுக்கு மக்களிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.ஆம் ஆத்மி கட்சி, ஒரு மாற்றத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்த மாற்றம், ஊழலால் ஏற்பட்ட கறையை அழிக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

முதல் லட்சியம் என்ன?

முதல்வராக தேர்வான பின் ஆதிஷி விளக்கம்புதிய முதல்வராக தேர்வான பிறகு, முதன்முறையாக, செய்தியாளர்களிடம், ஆதிஷி பேசியதாவது:டில்லின் புகழ்பெற்ற முதல்வராக இருந்தவரும், எனது குருவுமாகிய அரவிந்த் கெஜ்ரிவால், எனக்கு, இவ்ளவு பெரிய பொறுப்பை வழங்கியுள்ளார். அதற்காக, அவருக்கு, எனது நன்றி.முதன்முறையாக அரசியலுக்கு வந்தவுடன், இத்தனை பெரிய பொறுப்பு, எனக்கு கிடைத்திருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளெல்லாம், ஆம் ஆத்மி கட்சியில் மட்டுமே நடக்க முடியும்.நான் மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து, வந்தவள். இந்நேரம், நான் வேறு ஏதாவது ஒரு கட்சியில் இருந்திருந்தால், எனக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு, சீட் கூட கிடைத்திருக்காது.அப்படிப்பட்ட சூழ்நிலையில், என் மீது அரவிந்த் கெஜ்ரிவால், நம்பிக்கை வைத்து, என்னை எம்.எல்.ஏ., ஆக்கினார். அமைச்சராகவும் ஆக்கினார். இன்று, மிகப்பெரிய பொறுப்பு வாய்ந்த பதவியான, முதல்வர் பதவியிலும், அமர வைத்துள்ளார்.என் மீது, இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. அதே நேரத்தில், எனக்கு மிகுந்த கவலையாகவும் இருக்கிறது. காரணம், எனது மூத்த அண்ணன் அரவிந்த் கெஜ்ரிவால், தனது பதவியை, இன்று ராஜினாமா செய்கிறார்.நான் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் 2 கோடி டில்லி மக்கள் சார்பாக, கூறிக் கொள்வதெல்லாம், டில்லியின் முதல்வர், ஒரே ஒருவர்தான். அவர் அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே. டில்லி மக்களின் மனங்களில், முதல்வராக, என்றைக்குமே அரவிந்த் கெஜ்ரிவால் தான் நீடித்து கொண்டிருப்பார். நான், அடுத்த சில மாதங்களுக்கு, முதல்வராக இருப்பேன்.அந்த காலகட்டங்களில், அரவிந்த் கெஜ்ரிவாலை, மீண்டும் முதல்வராக, மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில், எனது பணிகள் அமையும். அது மட்டுமே எனது லட்சியம்.இவ்வாறு அவர் பேசினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anu Sekhar
செப் 19, 2024 17:13

அதிஷ் பிரதமராக முழு தகுதி உள்ளவர். இந்த லஞ்ச பேர்வழியை ஏன் ஆதரிக்கறார். அவளுடைய கைகளும் கறை படிந்ததா? டெல்லி மக்கள் உஷார்.


sankar
செப் 18, 2024 21:45

கரை படிந்த கரங்கள் - காய்ந்தாலும் காணாமல் போகாது


கிஜன்
செப் 18, 2024 00:28

பவுர்ணமி அன்று உதிக்கும் அம்மாவாசை ..... கெஜ்ரி உஷார் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை