பெங்களூரு: ''முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதித்து இருப்பதன் மூலம், கவர்னரால் ஜனநாயக படுகொலை நிகழ்த்தப்பட்டு உள்ளது,'' என்று, அமைச்சர் பிரியங்க் கார்கே கூறி உள்ளார்.தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:'மூடா' பிரச்னையில் முதல்வர் சித்தராமையாவுக்கு, எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அவர் மீது வழக்கு தொடர, கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதித்து உள்ளார். கவர்னர்கள் அரசியல் சாசனத்தை திரிக்கும், வேலையை செய்ய கூடாது. நாங்கள் கவர்னர்களை மட்டும் குறை கூறவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ.,யை பயன்படுத்தி, தங்கள் பேச்சை கேட்காத மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், தலைவர்களை பா.ஜ., அரசு பழிவாங்கி வருகிறது. போராட்டம்
கடந்த 2019ல் மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில், ஆட்சி அமைக்க பா.ஜ.,வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும் தேவேந்திர பட்னாவிசுக்கு, மஹாராஷ்டிரா கவர்னர் அவசரம், அவசரமாக முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் அந்த அரசு 80 மணி நேரத்தில் கவிழ்ந்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்றார். அவரை எம்.எல்.சி., ஆக்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அவரை எம்.எல்.சி., ஆக்க, மஹாராஷ்டிரா கவர்னர் அனுமதி வழங்குவதில் இழுத்தடித்தார். பின், உத்தவ் தாக்கரே டில்லி சென்று, போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார். கேரள அரசு
மேற்கு வங்க கவர்னராக இருந்த ஜக்தீப் தன்கர், அரசியல் விஷயங்களில் தலையிட்டார். மத்திய அரசு இயற்றிய சட்டங்களுக்கு எதிராக, சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்த கேரள அரசு கேட்ட அனுமதியை, கவர்னர் ஆரீப் முகமது கான் மறுத்தார். கடந்த 2018ம் ஆண்டு கர்நாடக கவர்னராக இருந்த வஜுபாய் வாலா, ஆட்சி அமைக்க பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இல்லாத போதும், எடியூரப்பாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின், நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று நியாயம் கேட்டோம். இதனால் அரசு கவிழ்ந்தது.தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல், கவர்னர் ரவி திருப்பி அனுப்பினார். சட்டசபையில் இருந்தும் வெளிநடப்பு செய்தார். கேரளா, மேற்கு வங்கம், தமிழகத்தில் கவர்னர்களால் நடக்கும் பிரச்னை, இப்போது கர்நாடகாவிலும் ஆரம்பித்து உள்ளது. அரசியல் சாசனத்தை நிலைநாட்ட கவர்னர் பாடுபட வேண்டும். ஆனால், கர்நாடகா கவர்னரால் அரசியல் சாசனம் படுகொலை செய்யப்பட்டு உள்ளது. பா.ஜ., அரசின் கைப்பாவையாக கவர்னர் செயல்படுகிறார்.அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்த, கவர்னர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதைவிட்டு இடையூறு செய்ய கூடாது. சித்தராமையா மீது வழக்கு தொடர என்ன ஆதாரம் உள்ளது என்று, கவர்னரிடம் கேட்போம்.இவ்வாறு அவர் கூறினார்.