| ADDED : ஆக 22, 2024 04:08 AM
பீதர்: முதியவரிடம் தகராறு செய்ததை தட்டி கேட்டதால், அமேசான் டெலிவிரி அலுவலகத்தில் புகுந்து, ஊழியரை 12 பேர் கும்பல் சரமாரியாக தாக்கியது.பீதர் டவுன் ஆதர்ஷ் காலனியில் அமேசான் பொருட்களை டெலிவிரி செய்யும் அலுவலகம் உள்ளது. கோலிஹள்ளி பகுதியின் விஜயகுமார் கோலி, 35 என்பவர் ஊழியராக வேலை செய்கிறார்.நேற்று முன்தினம் இரவு பொருட்களை டெலிவிரி செய்ய, பைக்கில் சென்றார். ஆதர்ஷ் காலனியில் ஒரு முதியவரிடம், வாலிபர்கள் சிலர் தகராறு செய்தனர்.பைக்கை நிறுத்திய விஜயகுமார், வாலிபர்களை தட்டி கேட்டார். இதனால், அவர்கள் விஜயகுமாரிடம் தகராறு செய்தனர். பின், அவர் பைக்கில் அங்கிருந்து புறப்பட்டு, அலுவலகம் வந்து விட்டார்.இந்நிலையில், டெலிவிரி அலுவலகத்திற்கு வந்த 12 பேர் கும்பல், விஜயகுமாரை பிடித்து சரமாரியாக தாக்கியதுடன், அவரது நெஞ்சிலும் மிதித்தனர். தடுக்க முயன்ற, இன்னொரு ஊழியர் ரோகன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. விஜயகுமார் அளித்த புகாரில், ஆதர்ஷ் காலனியின் முகமது அத்னான், 22 உட்பட நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், எட்டு பேரை போலீஸ் தேடுகிறது.விஜயகுமார் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள், அலுவலகத்தில் பொருத்தப்பட்டு இருந்த, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.