உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமகிருஷ்ண ஹெக்டேவை தோற்கடித்த பேரேஜ் சித்து

ராமகிருஷ்ண ஹெக்டேவை தோற்கடித்த பேரேஜ் சித்து

நாட்டின் கவனத்தை ஈர்த்த தொகுதிகளில் பாகல்கோட் லோக்சபா தொகுதியும் ஒன்றாகும். 1991ல் நடந்த தேர்தலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.கடந்த 1991 லோக்சபா தேர்தலின்போது, கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு இருந்தது; பங்காரப்பா முதல்வராக இருந்தார். அந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், ஜனதா தளம் களமிறக்கிய வேட்பாளர்களை தோற்கடிக்க காங்கிரஸ் திட்டம் வகுத்தது. குறிப்பாக அக்கட்சியின் செல்வாக்குமிக்க தலைவராக திகழ்ந்த ராமகிருஷ்ண ஹெக்டேவை குறி வைத்தது.

நிஜலிங்கப்பா வாரிசு

முன்னாள் முதல்வர் நிஜலிங்கப்பாவின் வாரிசாக ராமகிருஷ்ண ஹெக்டே அடையாளம் காணப்பட்டதால், லிங்காயத் சமுதாயத்துக்கும் இவரே தலைவராக இருந்தார். பாகல்கோட் தொகுதியில் களமிறங்கிய இவரை தோற்கடிக்க முடியாது என்ற கருத்து, அரசியல் வட்டாரத்தில் நிலவியது.ஆனால் இவரை தோற்கடித்தே ஆக வேண்டும் என, அன்றைய முதல்வர் பங்காரப்பா சபதம் செய்தார். பாகல்கோட்டில் களமிறக்க, தகுதியானவரை தேடுவதற்காக உளவுத்துறை அதிகாரியை, அன்றைய பிஜப்பூர் மாவட்டத்துக்கு (தற்போது விஜயபுரா) அனுப்பினார். அவரும் மாவட்டத்தில் தேடியபோது, 'பேரேஜ் சித்து' என்றே பிரசித்தி பெற்ற சித்து நாமேகவுடா, அதிகாரியின் கண்ணில் தென்பட்டார்.இவர், விஜயபுராவில் விவசாயிகளிடம் பணம் வசூலித்து, தன் சொந்த பணத்தை செலவிட்டு கிருஷ்ணா ஆற்றுக்கு குறுக்கே தடுப்பணை கட்டினார். விவசாயிகளால் கட்டப்பட்ட, 'இந்தியாவின் முதல் தனியார் அணை' என்ற பெருமை பெற்றுள்ளது. இதற்குக் காரணமான சித்து நாமேகவுடாவை, அனைவரும் 'பேரேஜ் சித்து' என்றே அழைக்கத் துவங்கினர்.இவரது செல்வாக்கு குறித்து, முதல்வர் பங்காரப்பாவிடம், அந்த அதிகாரி விவரித்தார். பங்காரப்பா நோக்கம் பற்றி, சித்து நாமேகவுடாவிடம் உளவுத்துறை அதிகாரி விவரித்தார். ஆனால் தேர்தலில் போட்டியிட, அவர் தயங்கினார்.இவரை பெங்களூருக்கு வரவழைத்து பேசிய பங்காரப்பா, 'நீங்கள் வேட்புமனு மட்டும் தாக்கல் செய்யுங்கள்; மற்றதை எங்களிடம் விட்டுவிடுங்கள்' என தைரியமூட்டினார். அதன்பின் ராமகிருஷ்ண ஹெக்டேவை எதிர்த்து போட்டியிட, சித்து நாமேகவுடா வேட்புமனு தாக்கல் செய்தார்.

மத்திய அமைச்சர்

தேர்தல் பொறுப்பை பங்காரப்பா ஏற்றிருந்தார். பாகல்கோட் நாட்டின் கவனத்தை ஈர்த்தது. அந்த தேர்தலில் ராமகிருஷ்ண ஹெக்டே தோல்வி அடைந்தார். வெற்றிபெற்ற சித்து நாமேகவுடா, அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையில் அமைச்சரானார். பங்காரப்பா தன் சபதம் நிறைவேறிய குஷியில் இருந்தார்.ஜனதா தளம் கட்சியின் செல்வாக்குமிக்க தலைவரான ராமகிருஷ்ண ஹெக்டேவை தோற்கடித்து, மத்திய அமைச்சரான சித்து நாமேகவுடா, அதன்பின் மாநில அரசியலுக்கு திரும்பினார். பாகல்கோட், ஜமகன்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2018 மே 28ல் நடந்த சாலை விபத்தில் சிக்கி, தன் 69வது வயதில் காலமானார்- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை