பெலகாவி: சாலையில் கிரிக்கெட் விளையாடியதில் ஏற்பட்ட விபரீதத்தால், இரண்டு தரப்பினருக்கு இடையே கலவரமாக மாறி பெரும் தகராறில் முடிந்துள்ளது. தடுக்க வந்த போலீஸ் ஏட்டு உட்பட எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்.பெலகாவி மாவட்டம், சஹாபுரா தாலுகா, ஆல்வான் தெருவில், நேற்று மாலை சிலர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அந்த பகுதியில் விளையாட கூடாது என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில், அப்பகுதியில் இருந்த ஒருவர், தன் வீட்டில் இருந்து பெரிய கத்தியை காண்பித்து மிரட்டினார். அப்போது, இரண்டு தரப்பினரும் கடுமையாக தாக்கி கொண்டனர். ஒவ்வொரு தரப்பினருக்கும் ஆதரவாக ஆட்கள் கூடி கொண்டே இருந்ததால், கலவர பூமியாக மாறியது. தகவலறிந்த வந்த போலீசார் மீது கற்கள் வீசியதால், பதற்றம் அதிகமானது. இச்சம்பவத்தில், ஒரு ஏட்டு உட்பட எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு பிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.அங்கு மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், துப்பாக்கி ஏந்திய மூன்று கே.எஸ்.ஆர்.பி., படைகள் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.பெலகாவி நகர போலீஸ் கமிஷனர் யடா மார்ட்டின், பெலகாவி நகர் முழுதும், 'ஹை அலெர்ட்' அறிவித்தார். மேலும், கலவரம் நடந்த பகுதியில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். பின், சஹாபூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று உயர் அதிகாரிகளுடன், நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினார். விடுமுறையில் சென்ற அனைத்து போலீசாரும், உடனடியாக பணிக்கு திரும்பும்படி உத்தரவிட்டார். பதற்றம் உள்ள பகுதிகளில், அடுத்த சில நாட்களுக்கு உயர் அதிகாரிகள் 24 மணி நேரமும் ரோந்தில் ஈடுபடும்படி அறிவுறுத்தினார்.பின், யடா மார்ட்டீன் கூறுகையில், ''கலவரத்தில் எட்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் கத்தியை காண்பித்ததது தொடர்பாக, சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுகிறது. யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்,'' என்றார்.