உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்., தொகுதிகளை வெல்ல முடியாத காங்., மாநகராட்சி தேர்தலை நடத்துவதில் தயக்கம்

பெங்., தொகுதிகளை வெல்ல முடியாத காங்., மாநகராட்சி தேர்தலை நடத்துவதில் தயக்கம்

பெங்களூரு: லோக்சபா தேர்தலில் பெங்களூரின் மூன்று தொகுதிகளிலும் தொடர்ந்து காங்கிரஸ் தோல்வியை சந்திப்பதால், மாநகராட்சி தேர்தலை நடத்த அக்கட்சி அச்சப்படுகிறது.பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்டு 198 வார்டுகள் இருந்தன. பா.ஜ., ஆட்சியில் வார்டுகள் எண்ணிக்கை 243 ஆக உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2020ல் இருந்து, இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை.கவுன்சிலர்கள் இல்லாததால், மக்கள் தங்கள் பிரச்னைகளை யாரிடம் சொல்வது என்று, பரிதவித்து வருகின்றனர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், வார்டு மறுவரையறை பணிகளும் நடந்தன. வார்டு எண்ணிக்கை 225 ஆக மாற்றப்பட்டது. ஆனாலும், தேர்தலை நடத்துவது பற்றி, எந்த அறிகுறியும் தென்படவில்லை.

வார்டு மறுவரையறை

இந்நிலையில் 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இலவச பஸ் திட்டம், இலவச மின்சாரம், மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய், இலவச அரிசி போன்ற திட்டங்களை காண்பித்து மாநகராட்சி தேர்தலை நடத்த 'பிளான்' செய்தது. இந்த நேரத்தில் லோக்சபா தேர்தல் வந்தது. எப்படியும் பெங்களூரில் மூன்று லோக்சபா தொகுதிகளை கைப்பற்றி விடலாம் என கனவு கண்டது. பெங்களூரு மாநகராட்சியில், மூன்று லோக்சபா தொகுதிகள் உள்ளன. பெங்களூரு தெற்கில், 1996 முதல் 2024 வரை நடந்த எட்டு தேர்தல்களிலும்; பெங்களூரு வடக்கில் 2004 முதல் 2024 வரை நடந்த ஐந்து தேர்தல்களிலும்; மறுவரையறை செய்யப்பட்டது முதல் பெங்களூரு சென்ட்ரலில் 2009 முதல் 2024 வரை நடந்த நான்கு தேர்தல்களிலும் தொடர்ந்து, பா.ஜ.,வே வெற்றி பெற்று வருகிறது.இந்த கால கட்டத்தில் காங்கிரசில் ஜாபர் ஷெரீப், ஹரிபிரசாத், கிருஷ்ணபைரே கவுடா என பெருந்தலைகளை களமிறக்கியும் பா.ஜ.,வின் இரும்பு கோட்டையை அசைக்க முடியவில்லை.

மனக்கோட்டை

இது தவிர, மாநகராட்சிக்கு உட்பட்டு மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பா.ஜ., 16, காங்கிரஸ் 12 பேர் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். இம்முறை நடந்த லோக்சபா தேர்தலில், பெங்களூரு லோக்சபா தொகுதிகளில் எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என, காங்கிரஸ் தலைவர்கள் மனக்கோட்டை கட்டினர். ஆனால் மூன்று தொகுதிகளிலும் பா.ஜ.,வே மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு, பெங்களூரு சென்ட்ரல் என மூன்று தொகுதிகளிலும் பா.ஜ., 24 லட்சம் ஓட்டுகளையும், காங்கிரஸ் 18 லட்சம் ஓட்டுகளையும் பெற்றுள்ளது. தற்சமயம் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி உள்ள நிலையில், பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்தினால், 'நிச்சயம் தோற்று விடுவோம்' என்று, காங்கிரஸ் அரசுக்கு பெரும் பீதி ஏற்பட்டு உள்ளது. ஆனாலும் காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர்கள் சிலர், மாநகராட்சி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்று, அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ