உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில் பவானி ரேவண்ணாவுக்கு முன்ஜாமின்

வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில் பவானி ரேவண்ணாவுக்கு முன்ஜாமின்

பெங்களூரு: வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில், பவானி ரேவண்ணாவுக்கு முன்ஜாமின் வழங்கி, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு முன், பவானி விசாரணைக்கு ஆஜரானார்.ஹாசன் ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, 66. இவரது மனைவி பவானி. மைசூரு கே.ஆர்., நகரை சேர்ந்த, வேலைக்கார பெண்ணை கடத்திய வழக்கில், விசாரணைக்கு ஆஜராக பவானிக்கு, சிறப்பு புலனாய்வு குழுவினர் இரண்டு முறை சம்மன் அனுப்பினர்.ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் பவானி தலைமறைவானார். முன்ஜாமின் கேட்டு, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி ஆனது.இதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில், முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது, நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித் முன்னிலையில் நேற்று விசாரணை நடந்தது.அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ரவிவர்மா குமார் வாதாடுகையில், ''வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில், மனுதாரருக்கு பங்கு உள்ளது. அவருக்கு முன்ஜாமின் வழங்கினால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. பெங்களூரு 42வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றம், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உள்ளது,'' என்றார்.மனுதாரர் தரப்பு வக்கீலும், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித், பவானிக்கு வரும் 14ம் தேதி வரை, முன்ஜாமின் வழங்கி பிறப்பித்த உத்தரவில் நீதிபதி கூறியிருப்பதாவது:மனுதாரருக்கு வழங்கப்பட்டு இருப்பது முன்ஜாமின் தான். அதனால் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நேற்று) மதியம் 1:00 மணிக்கு, சிறப்பு புலனாய்வு குழு முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். பிடிவாரன்ட் இருந்தாலும், விசாரணையின்போது மனுதாரரை கைது செய்யக் கூடாது. அவரிடம் விசாரணை நடத்திவிட்டு, தினமும் மாலை 5:00 மணிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கே.ஆர்., நகர், ஹாசனுக்கு மனுதாரர் செல்லக் கூடாது.இவ்வாறு உத்தரவில் நீதிபதி நிபந்தனைகள் விதித்தார்.முன்ஜாமின் கிடைத்ததால், வக்கீல்களுடன் சென்று, சிறப்பு புலனாய்வு குழு முன், விசாரணைக்கு பவானி ஆஜரானார்.

கார் டிரைவர் கைது

வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில், பவானியின் கார் டிரைவர் அஜித், 32, என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பார விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் தலைமறைவானார்.சிக்கமகளூரில் உள்ள மாமனார் வீட்டில், அஜித் இருப்பதாக கிடைத்த தகவலின்படி, கடந்த மாதம் 28ம் தேதி, அஜித் மாமனார் வீட்டில், சிறப்பு புலனாய்வு குழு சோதனை நடத்தியது. ஆனால் அஜித் அங்கு இல்லை.உறவினர் வீட்டில் இருந்த அஜித், நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி