உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிளகாய் பூமியில் பாகற்காய் அசத்திய ஹாவேரி விவசாயி

மிளகாய் பூமியில் பாகற்காய் அசத்திய ஹாவேரி விவசாயி

கர்நாடகாவின் வடக்கு மாவட்டமான ஹாவேரி, மிளகாய் விளைச்சலுக்கு பெயர் பெற்றது. இங்கு விளைவிக்கப்படும் மிளகாய் அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.மிளகாய் விளையும் பூமியில், ஒரு விவசாயி, பாகற்காய் விளைச்சலில் அசத்துகிறார். ஹாவேரியின் ஹிரேகெரூர் அபலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தய்யா, 65. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டார். ஆனால் லாபம் கிடைக்கவில்லை.இதனால் வேறு பயிர்களை பயிரிட முடிவு செய்தார். அவரிடம், சில நண்பர்கள், 'பாகற்காய் சாகுபடி செய்து பாருங்கள்' என்றனர். முதலில் தயங்கிய சாந்தய்யா, பின்னர் 1 ஏக்கர் நிலத்தில் பாகற்காய் சாகுபடி செய்தார். மீதமுள்ள 1 ஏக்கரில் நிலக்கடலை, சோளம், கத்தரிக்காய் பயிரிட்டார்.தற்போது அவரது தோட்டத்தில் பாகற்காய், நிலக்கடலை, மக்காசோளம், கத்தரிக்காய் நன்கு வளர்ந்துள்ளது. பாகற்காய் விற்பனை செய்து மாதம் 70,000 முதல் 80,000 ரூபாய் வரை வருவாய் ஈட்டி வருகிறார்.சாந்தய்யா கூறியதாவது:பாகற்காய் சாகுபடி செய்து வளர்ப்பது மிகவும் எளிதான விஷயம். பாகற்காய் 75 நாட்களில் விளைந்துவிடும். மிளகாய் விளையும் பூமியில் பாகற்காயா என்று, ஒரு சிலர் என்னிடம் கேட்டனர். ஆனாலும் என் நண்பர்கள் கொடுத்த தைரியத்தால் பாகற்காய் சாகுபடி செய்தேன்.பாகற்காயை சாகுபடி செய்ய சில வழிமுறைகள் உள்ளன. முதலில் நிலத்தை நன்கு சமன் செய்ய வேண்டும். மண்ணின் ஈரப்பதம் குறைந்தபின் பாத்தி அமைத்து, மாட்டு சாணம் துாவ வேண்டும். அதன் பின்னர் பாகற்காய் விதைகளை நட வேண்டும். பாகற்காய் செடிகளுக்கு இடையில் 6 அடி இடைவெளி விடுவது மிகவும் அவசியம்.விவசாய நிலத்தில், ஒரு பயிரை பயிரிடும் முன்பு, அந்த நிலத்தின் தன்மை பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும். பயிர்களுக்கு தேவைக்கேற்ப ரசாயன உரங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பது செடிகளை அதிகம் பாதுகாக்கும்.இவ்வாறு அவர் கூறினார்- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்