உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 198 வார்டுகளுக்கு மாநகராட்சி தேர்தல் நடத்த வலியுறுத்தல் கிரேட்டர் பெங்களூரு சட்டத்துக்கு பா.ஜ., - ம.ஜ.த., கடும் எதிர்ப்பு

198 வார்டுகளுக்கு மாநகராட்சி தேர்தல் நடத்த வலியுறுத்தல் கிரேட்டர் பெங்களூரு சட்டத்துக்கு பா.ஜ., - ம.ஜ.த., கடும் எதிர்ப்பு

பெங்களூரு: கிரேட்டர் பெங்களூரு சட்ட மசோதாவுக்கு பா.ஜ., - ம.ஜ.த., கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 198 வார்டுகளுக்கு மாநகராட்சி தேர்தல் நடத்தும்படி வலியுறுத்துகின்றனர்.பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர்களின் பதவிக் காலம், 2020 செப்டம்பரில் நிறைவு பெற்றது. நான்கு ஆண்டுகளாகியும் மாநகராட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.அப்போது, 198 வார்டுகள் இருந்ததை, பா.ஜ., ஆட்சியில், 243ஆக உயர்த்தி, பெங்களூரு மாநகராட்சி சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் வந்த காங்கிரஸ் ஆட்சியில், 225 வார்டுகளாக குறைக்கப்பட்டது. ஆனால், இன்னமும் வார்டு மறுவரையறை செய்யப்படவில்லை.

10 மாநகராட்சி

இதற்கிடையில், பெங்களூரு நகருடன் புறநகர் பகுதிகளை சேர்த்து, 400 வார்டுகளாக உயர்த்தும், கிரேட்டர் பெங்களூரு சட்ட மசோதா, சமீபத்தில் சட்டசபை, மேல்சபையில் தாக்கல் செய்யப்பட்டது.தற்போது இருக்கும் ஒரு மாநகராட்சியை, 10 வரை உயர்த்தவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ., கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், சட்டமன்ற குழு பரிசீலனைக்கு அமைக்கப்பட்டது. சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் தலைமையில், சட்டமன்ற குழு, இரண்டு முறை ஆலோசனை நடத்தியது.

சாதக, பாதகம்

இதற்கிடையில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தலைமையில், கிரேட்டர் பெங்களூரு சட்ட மசோதாவின் சாதக, பாதகங்கள் குறித்த கருத்தரங்கம், நகரின் பாரதிய வித்யா பவனில் நேற்று நடந்தது.மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி, எம்.எல்.ஏ.,க்கள் அஸ்வத் நாராயணா, முனிரத்னா, கோபாலய்யா, ராமமூர்த்தி, விஸ்வநாத், எம்.எல்.சி.,க்கள் கோபிநாத்ரெட்டி, பாரதிஷெட்டி, ம.ஜ.த., -- எம்.எல்.சி., ஷ்ரவணா, பெங்., மத்திய மாவட்ட தலைவர் சப்தகிரிகவுடா, தெற்கு மாவட்ட தலைவர் உமேஷ்ஷெட்டி, சாந்திநகர் தொகுதி தலைவர் சிவகுமார், மாநகராட்சி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பத்மநாபரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

கன்னடர்கள்

கருத்தரங்கில், கிரேட்டர் பெங்களூரு சட்ட மசோதா தயாரித்த வல்லுனர் குழு உறுப்பினர் ரவிசந்திரா பேசுகையில், ''நாங்கள் அளித்த சிபாரிசில், 20 சதவீதம் மட்டுமே மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது.''அதிலும் நாங்கள் சிபாரிசு செய்த விஷயங்களிலும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நீதிமன்றத்தில் முறையிட்டால் மசோதாவுக்கு பின்னடைவு ஏற்படும்,'' என்றார்.சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பேசியதாவது:கெம்பே கவுடா கட்டிய பெங்களூரு நகரை பிளவுப்படுத்தக் கூடாது. இங்கு கன்னடர்கள் தான் உயர்வானவர்கள். கன்னடர்களுக்காகவே இருக்க வேண்டும். கன்னடர்கள் தான் மேயர் பதவியில் அமர வேண்டும்.எனவே கிரேட்டர் பெங்களூரு சட்ட மசோதாவை, பா.ஜ., - ம.ஜ.த., தரப்பில் கடுமையாக எதிர்க்கிறோம். மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள், குடிநீர் வடிகால் வாரியம், பி.எம்.டி.சி., குடிசை மாற்று வாரியத்தை சேர்த்தால், தனியாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்க வேண்டிய அவசியம் இருக்காது.அரசுக்கும் செலவு குறையும். மக்களுக்கும் ஒரே இடத்தில் அனைத்து சேவையும் கிடைக்கும். மற்ற நகரில் இதுபோன்று தான் உள்ளது. எனவே பெங்களூரிலும் அதே நடைமுறை செயல்படுத்த வேண்டும்.

பல குளறுபடி

புதிய மசோதாவில் பல குளறுபடிகள் உள்ளன. பல திருத்தங்கள் செய்ய வேண்டி உள்ளது. திருத்தம் செய்வதற்கு தாமதம் ஏற்படும் என்பதால், பழையபடி, 198 வார்டுகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும். புதிய மசோதா அமலுக்கு வந்தால், எத்தகைய பிரச்னைகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.ஒரு நாட்டுக்கு ஒரு பிரதமர், ஒரு மாநிலத்துக்கு ஒரு முதல்வர் போன்று, ஒரு நகருக்கு ஒரு மேயர் இருக்க வேண்டும். மேயரின் பதவிக் காலம், இரண்டரை ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகள் இருக்க வேண்டும். சில திருத்தங்கள் செய்யும்படி, வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி, அரசுக்கு சிபாரிசு செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

நாடகம்

இப்படி ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் புதிய சட்டங்கள் கொண்டு வருவதில் மட்டுமே அக்கறை காண்பிக்கின்றனரே தவிர, பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடத்துவதற்கு அக்கறை காண்பிக்கவில்லை.இவர்களின் நாடகத்தால், கவுன்சிலர் பதவி எதிர்பார்த்து இருக்கும் பிரமுகர்கள், நான்கு ஆண்டுகளாக தேர்தலுக்காக காத்திருந்து நொந்து போயுள்ளனர். இன்னும் ஓராண்டு முடிந்தால், மாநகராட்சியின் ஒரு ஆட்சிக் காலமே முடியும். இதற்கு, தேர்தல் நடத்தும்படி, பெங்களூரு எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினால் மட்டுமே முடியும்.'உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், கொரோனா காலத்தில் இருந்து, பெங்களூரு நகர மக்கள் அவதிப்படுகின்றனர். இது அரசுக்கும், எம்.எல்.ஏ.,க்களின் காதுகளுக்கும் விழாதது போன்று நடிக்கின்றனர்' என, கட்சி பிரமுகர்கள் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை