''வங்கதேசத்தினர் பெங்களூரில் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். சமூக விரோதிகள் இப்படி பரவி வருவது, கர்நாடகாவுக்கும், நாட்டுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்,'' என, ஹாவேரி பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை எச்சரிக்கை தெரிவித்தார்.வங்கதேசத்தினர் பலரும் சட்டவிரோதமாக பெங்களூரில் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அதுவும், பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களாகவும் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.*தனி காலனிஇவர்கள் மாரத்தஹள்ளி அருகில் உள்ள குடிசை வாழ் பகுதியில் 'தனி காலனி' அமைத்து பல நாட்களாக வசித்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, ஹாவேரி பா.ஜ., எம்.பி., பசவராஜ் பொம்மை டில்லியில் நேற்று கூறியதாவது:பெங்களூரு சர்வதேச நகரம். வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக தப்பி வந்த பலர், நகரில் தனி காலனி அமைத்துள்ளனர். நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது, சட்டவிரோதமாக தங்கி இருந்த 64 வங்கதேசத்தினரை அடையாளம் கண்டு, அந்த நாட்டிற்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.பெங்களூரு மட்டுமின்றி சிக்கமகளூரு காபி எஸ்டேட், உடுப்பி மீன் துறைமுகம் என பல பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். சமூக விரோதிகள் இப்படி பரவி வருவது, மாநிலத்துக்கும், நாட்டுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.*வக்காலத்து இந்த விஷயத்தில், சில அரசியல் கட்சிகள், நாட்டின் பாதுகாப்பை கருதாமல், அரசியல் லாபத்துக்காக அவர்களுக்கு வக்காலத்து வாங்கி அரசியல் செய்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.போலி ஆவணங்களை பயன்படுத்தி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. வெளி நாட்டில் இருந்து வருவோர் மீது மாநில அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.வங்கதேசத்தினர் சிலர், சட்ட விரோதமாக பெங்களூரில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.பரமேஸ்வர், அமைச்சர், உள்துறை- நமது நிருபர் -