'சீட்' கிடைக்காத விரக்தியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக பா.ஜ., தலைவர்கள் பேசுகின்றனர். இதனால், லோக்சபா தேர்தலில் பின்னடைவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதை உணர மறுக்கின்றனர்.தென் மாநிலங்களில், மாநில கட்சிகளின் ஆதிக்கமும், காங்கிரஸ் ஆதிக்கமும் இருந்த போது, கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியை கொண்டு வந்தவர், முன்னாள் முதல்வர் எடியூரப்பா என்பதை அரசியல் பிரமுகர்கள் அறிவர்.கட்சியில் இருந்து அவர் விலகி, வேறு கட்சி துவக்கியதால், ஆட்சியை இழக்க நேரிட்டதும் அறிவர். கடந்த சட்டசபை தேர்தலில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால், ஏற்பட்ட விபரீதமும் பா.ஜ., தலைவர்களுக்கு தெரியும். தவிடுபொடி
அதே வேளையில், 2019ல் அவரை மாநில தலைவராக்கியதால், காங்கிரஸ், ம.ஜ.த.,வை தவிடு பொடியாக்கியதையும் நன்கு அறிவர். அனைத்து சாதக பாதகங்களையும் அறிந்து தான், இம்முறை லோக்சபா தேர்தலில் அவரின் பேச்சுக்கு, பா.ஜ., மேலிடம் மீண்டும் முக்கியத்துவம் தருகிறது. அவரது இளைய மகன் விஜயேந்திராவை மாநில தலைவராக்கியது. மூத்த மகனுக்கு ஷிவமொகாவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.எடியூரப்பாவால் பதவி, அதிகாரம் பெற்றவர்கள், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், அவர் மீதே கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிகாரத்துக்காக, அவரது வீட்டுக்கு பலமுறை சென்று கெஞ்சியவர்கள், தற்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.ஏற்கனவே விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், சில ஆண்டுகளாகவே அடிக்கடி குற்றம் சாட்டி வந்தார். அந்த வரிசையில் பலரும் சேர்ந்துள்ளனர். இதனால், அவர்களின் கண்ணியத்துக்கும், அவர்கள் உயிராய் நேசிக்கும் கட்சிக்கும் பின்னடைவு ஏற்படுவதை உணர மறுக்கின்றனர். தன்னலம் மட்டுமே பார்ப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். எதிர்ப்பது ஏன்?
தன் மகனுக்கு சீட் கிடைக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஒரு பக்கம் என்றால், தனக்கு சீட் பெற்று தரவில்லை என்று ரேணுகாச்சார்யா, கரடி சங்கண்ணா, மாதுசாமி மறு பக்கம் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவர்கள் வரிசையில் தற்போது சதானந்த கவுடாவும் இணைந்துள்ளார்.இவரை மாநில தலைவர் ஆக்கியதும், முதல்வர் பதவியில் அமர வைத்ததிலும் எடியூரப்பாவின் பங்கு அதிகம் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு மாநில தலைவர் பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஈஸ்வரப்பா, பதவி வழங்கிய போது குற்றம் சாட்டாமல், அவரது மகனுக்கு லோக்சபா சீட் கிடைக்கவில்லை என்பதற்காக குற்றம் சாட்டுவதை தன்னலத்தை காண்பிக்கிறது என்று கட்சி தொண்டர்கள் அங்கலாய்க்கின்றனர்.'பிரதமர் நிகழ்ச்சிக்கு அழைக்காதது ஏன்?'பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா, தாவணகெரேயில் அளித்த பேட்டி:தாவணகெரே தொகுதியில் எம்.பி., சித்தேஸ்வருக்கு சீட் தர கூடாது என்று, எதிர்ப்பு தெரிவித்தோம். அதையும் மீறி சித்தேஸ்வர் மனைவி காயத்ரிக்கு சீட் கொடுத்து உள்ளனர். வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று, நாங்கள் கூட்டம் நடத்தினோம். ஆனால் கட்சிக்கு எதிராக பேசவில்லை. கட்சி மேலிடத்திற்கு அனுப்பப்பட்ட பட்டியலில், காயத்ரியின் பெயரே இல்லை. அவருக்கு சீட் கொடுத்தது ஏன்.நாங்கள் கட்சி விரோத செயலில் ஈடுபடுகிறோம் என்று நினைத்தால், கட்சியில் இருந்து துாக்கி வீசுங்கள். ஷிவமொகாவில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு, மரியாதை நிமித்தமாக, எங்களை எடியூரப்பா அழைக்கவில்லை. நாங்கள் தேவை இல்லை என்று நினைத்தால் விட்டுவிடுங்கள். மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று விரும்புகிறோம்.முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மகனுக்கு சீட் கொடுத்திருக்க வேண்டும். நான் இப்படி கூறுவதால், நான் அவர் பக்கம் நிற்கிறேன் என்று அர்த்தம் இல்லை. அவர் கட்சிக்காக நிறைய தியாகம் செய்தவர். சித்தேஸ்வரின் மகன் அனித்குமார் என்னிடம் வந்து, அனைத்தும் மறந்து ஒன்றாக செயல்படுவோம் என்றார். நான் சுயநலவாதி இல்லை.இவ்வாறு அவர் கூறினார்- நமது நிருபர் -.