இன்று ஜனாதிபதியிடம் முறையிட பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் முடிவு
சாணக்யாபுரி:முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் எழுந்துள்ள அரசியல் சாசன நெருக்கடி குறித்து, ஜனாதிபதியை சந்திக்க டில்லி பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் முடிவு செய்துள்ளனர்.கலால் கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை, சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தபடி, அரசை நிர்வகித்து வருவதாக ஆம் ஆத்மி கூறுகிறது.இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பா.ஜ., குற்றஞ்சாட்டி வருகிறது. இதுதொடர்பாக ஜனாதிபதி திரௌபதி முர்முவை இன்று பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்துப் பேசவுள்ளனர்.இதுகுறித்து நேற்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜயேந்தர் குப்தா கூறியதாவது:டில்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஊழலில் மூழ்கியுள்ளது. ஆட்சி நிர்வாக அமைப்பு சரிந்துவிட்டது.டில்லி பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய குழு வெள்ளிக்கிழமை (இன்று) மாலை ஜனாதிபதியை சந்தித்து மனு ஒன்றை அளிக்கும்.டில்லியில் ஆறாவது நிதிக் குழு அமைக்கப்படாதது, சி.ஏ.ஜி., அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்யாதது ஆகியவை குறித்தும் ஜனாதிபதியிடம் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் முறையிடுவர்.இவ்வாறு அவர் கூறினார்.